மூலநூலாசிரியர் வாழ்க்கைக் குறிப்பு

மஜ்லிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா

ஸா

ஸாலிஹ் பின் அஹ்மது அஷ்ஜாமி

மூலநூலாசிரியர்

இந்நூலின் மூலநூலாசிரியர் ஸாலிஹ் பின் அஹ்மது அஷ்ஜாமி ஆவார். இவர் 1934ஆம் ஆண்டு (ஹிஜ்ரீ: 1353) டமாஸ்கஸ் நகரில் தோமா எனும் ஊரில் பிறந்தார். அவர்தம் தந்தை பேரறிஞர் அஹ்மது அஷ்ஜாமி தோமாவின் முஃப்தியாகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர் மார்க்க அறிவைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வத்தோடு வளர்ந்து வந்தார். டமாஸ்கஸ் நகரில் உள்ள ஜரீஅத் பயிலகத்தில் சேர்ந்து மார்க்கக் கல்வியைக் கற்கத் தொடங்கினார். பின்னர் ஜரீஅத் கல்லூரியில் சேர்ந்து தம் படிப்பைத் தொடர்ந்தார். 1958ஆம் ஆண்டு கல்லூரியில் பட்டம் பெற்றார்.

இவர்தம் ஆசிரியர்கள் ஷைக் அப்துர் ரஹ்மான் அத்தீபி, ஷைக் அப்துல் ஃகனி அத்திகர், ஷைக் அப்துல் கரீம் அர்ரிஃபாயீ, ஷைக் அப்துல் வஹ்ஹாப் அல்ஹாஃபிழ் உள்ளிட்டோர் ஆவர்.

பிறகு அழைப்புப் பணி, ஆசிரியப் பணி ஆகிய இரண்டு பணிகளையும் செய்துகொண்டே பயனுள்ள பல்வேறு நூல்களை எழுதினார். இவர் எழுதிய நூல்களுள் சில:

  • மின் மசானிஸ் ஸீரத்தி,
  • மின் மசானிஷ் ஜமாயிலி,
  • மின் மசானிஃ கஸாயிஸுன் நபவிய்யா,
  • சீரத்துன் நபவிய்யா,
  • சீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஃபி பைத்திஹி,
  • அல்வாவுன் அலா திராசத்திஸ் ஸீரத்தி,
  • ஹாகதா ஃபஹிமஸ் ஸஹாபா,
  • அஹ்லுஸ் ஸுஃப்பா பஃதன் அனில் வஹ்மி வல்கியாலி,
  • அல்ஃகரானீக்கு கிஸ்ஸத்துன் தகீலத்துன் அலஸ் ஸீரத்தின் நபவிய்யா முதலியவை ஆகும்.

இவை தவிர பல்வேறு நூல்களை மீளாய்வு செய்து வெளியிட்டுள்ளார். அவை:

  • அல்வாஃபி பிமா ஃபிஸ்ஸஹீஹைன் லில்இமாமைனி அல்புகாரி வ முஸ்லிம்,
  • ஸவாயிதுஸ் ஸுனனி அலஸ் ஸஹீஹைன்,
  • ஸவாயிதுல் மூஅத்தா வல்முஸ்னத் அலல் குதுபிஸ் ஸித்தா,
  • ஸவாயிதுஸ் ஸுனனில் குப்ரா லில்பைஹகீ அலல் குதுபிஸ் ஸித்தா,
  • மஜலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா,
  • அதபுல் மூஃப்ரத் லில்இமாமில் புகாரீ,
  • ஸவாயிது இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் வல்முஸ்தத்ரக் அலல் குதுபித் திஸ்ஆ,
  • தர்subீபு வ தப்வீபு முஸ்னதில் இமாம் அஹ்மத் முதலானவை.

இவர் தம் ஊரில் உள்ள ஷாமிஆ முஸ்லிதுகளில் சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். 1980ஆம் ஆண்டு வரை சிரியாவின் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு அல்இமாம் முஹம்மத் பின் ஸஊத் அல்இஸ்லாமிய்யா எனும் பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள பயிலகங்களில் 1998ஆம் ஆண்டு வரை ஜரீஅத் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இவர் எப்போதும் நூல்களைப் படிப்பதிலும் அவற்றை ஆய்வு செய்வதிலுமே மிகுதியாக ஈடுபாடு கொண்டவர். தற்போது இவர் மக்காவின் ரியாத் நகரில் வசித்து வருகிறார். அல்லாஹ் இவருக்கு முழுமையான ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளை வழங்குவானாக.

நூல் விவரம்

மஜ்லிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா — பாகம் இரண்டு

நூல்: மஜ்லிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா

மூலம்: தமிழாக்கம் (பாகம் இரண்டு)

அரபு மூலம்: ஸாலிஹ் பின் அஹ்மது அஷ்ஜாமி

தமிழாக்கம்: முனைவர் மெளலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

நூல் வடிவமைப்பு: ஷனாப் ஷைதர் அலி

பதிப்பு: முதல் பதிப்பு, நவம்பர் 2025

பக்கங்கள்: ....

பிரதிகள்: 1000

விலை: ரூ. 00/-

அச்சிட்டோர்: ஷிஞ்..., சென்னை - 8

வெளியீடு:

அப்துல்லாஹ் பப்ளிகேஜன்ஸ்

ஹாஷா வணிக வளாகம், எண்: 2, தரங்கை சாலை,

(முஸ்லிதே மஃமூர் அருகில்)

மயிலாடுதுறை-609 001

மின்னஞ்சல்: info@abdullahpublications.com

செல்பேசி: +91 99522 31434

மூலநூலாசிரியர் முன்னுரை

தொடங்கிய எல்லாச் செயல்களையும் தொய்வின்றி முடிக்க உதவிய உயர்ந்தோன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக. தொல்லுலகில் வாழும் மனித இனத்திற்குத் தம் செவ்விய சொற்களால் எக்காலத்திற்கும் சீரான வழிகாட்டிச் சென்ற இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும் அவர்களின் உற்ற தோழர்கள், குடும்பத்தார் ஆகிய அனைவர்மீதும் வல்லோனின் வற்றாக் கருணை என்றென்றும் நிலவட்டுமாக.

மஜலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா எனும் இந்நூல், ஹதீஸ்களின் அடிப்படை நூல்களாக மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பதினான்கு நூல்களின் தொகுப்பே ஆகும். அவை:

முதன்மை மூலாதாரங்கள் (14 நூல்கள்)

  • மூஅத்தா — இமாம் மாலிக் (93-179 ஹிஜ்ரீ)
  • முஸ்னது — இமாம் அஹ்மத் (164-241 ஹிஜ்ரீ)
  • அல்ஜாமி உஸ் ஸஹீஹ் — இமாம் புகாரீ (194-256 ஹிஜ்ரீ)
  • அல்ஜாமி உஸ் ஸஹீஹ் — இமாம் முஸ்லிம் (206-261 ஹிஜ்ரீ)
  • ஸுனன் — இமாம் அபூதாவூத் (133-204 ஹிஜ்ரீ)
  • ஜாமிஉ — இமாம் திர்மிதி (209-279 ஹிஜ்ரீ)
  • ஸுனன் — இமாம் நஸாயீ (215-303 ஹிஜ்ரீ)
  • ஸுனன் — இமாம் இப்னுமாஜா (209-273 ஹிஜ்ரீ)
  • ஸுனன் — இமாம் தாரிமீ (181-255 ஹிஜ்ரீ)
  • அஸ்ஸுனனுல் குப்ரா — இமாம் பைஹகீ (384-458 ஹிஜ்ரீ)
  • ஸஹீஹ் — இமாம் இப்னு குஸைமா (223-311 ஹிஜ்ரீ)
  • ஸஹீஹ் — இமாம் இப்னு ஹிப்பான் (270-354 ஹிஜ்ரீ)
  • முஸ்தத்ரக் — இமாம் ஹாகிம் (321-405 ஹிஜ்ரீ)
  • அல்அஹாதீஸுல் முக்தாரா — இமாம் அல்மக்தஸீ (335-380 ஹிஜ்ரீ)

இத்தோடு கீழ்க்கண்ட ஆறு நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அவை:

கூடுதல் மூலாதாரங்கள் (6 நூல்கள்)

  • அல்ஜாமிஉ — பைனஸ் ஸஹீஹைன்
  • ஸவாயிதுஸ் ஸுனனி அலஸ் ஸஹீஹைன்
  • ஸவாயிதுல் மூஅத்தா, ஸவாயிதுல் முஸ்னத் (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸாயீ ஆகிய ஆறு நூல்களில் இல்லாதவை.)
  • ஸவாயிதுஸ் ஸுனனில் குப்ரா லில்பைஹகீ (ஆறு நூல்களில் இல்லாதவை.)
  • ஸவாயிது இப்னு குஸைமா, ஸவாயிது இப்னு ஹிப்பான், ஸவாயிதுல் முஸ்தத்ரக் (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, நஸாயீ, தாரிமீ, மூஅத்தா மாலிக், முஸ்னது அஹ்மத் ஆகிய ஒன்பது நூல்களில் இல்லாதவை.)
  • ஸவாயிதுல் அஹாதீஸில் முக்தாரா (ஒன்பது நூல்களில் இல்லாதவை.)

இந்நூலின் நோக்கம்

இந்த நூல் தொகுக்கப்பெற்ற முக்கிய நோக்கம் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ள ஹதீஸ்களை நீக்குவதாகும். அதாவது இந்நூலில் ஒரு ஹதீஸ் ஒரு தடவை மட்டுமே கூறப்படும்.

அதாவது நபித்தோழர்களுள் ஒருவர் அறிவித்த ஹதீஸ் ஒரே நூலில் மீண்டும் மீண்டும் கூறப்படுவது அல்லது ஒரே ஹதீஸ் மேற்கண்ட நூல்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இடம்பெறுவது — இதுதான் ஒரு ஹதீஸ் என்பதற்கான விளக்கமாகும்.

அதற்கான எடுத்துக்காட்டு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாக இடம்பெற்றுள்ள 'இன்னமல் அஃகாலு பிந் நிய்யாத்...' (செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே...) எனும் ஹதீஸ் ஆகும்.

இந்த ஹதீஸை புகாரீ இமாம் அவர்கள் தமது நூலில் ஏழு தடவை ஆங்காங்கே பதிவுசெய்துள்ளார்கள். இதே ஹதீஸை அஹ்மத், முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ, இப்னுமாஜா, இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் உள்ளிட்ட இமாம்கள் அனைவரும் தத்தமது நூல்களில் பதிவுசெய்துள்ளார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் இந்த ஹதீஸைக் குறிப்பிட்ட தலைப்பின்கீழ் குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் ஒரு தடவை இடம்பெறச் செய்தால் போதுமானது என முடிவெடுத்து, அதையே இந்நூலில் செய்துள்ளேன்.

அதேநேரத்தில் இதே ஹதீஸ் உமர் ரளியல்லாஹு அன்ஹு தவிர நபித்தோழர்களுள் வேறு யாரேனும் அறிவித்திருந்தால் அந்த அறிவிப்பு நீக்கப்படாது. ஏனென்றால் அது 'திரும்பத் திரும்பக்கூறல்' எனும் வகையில் வராது. நபித்தோழர் மாறிவிட்டதால் அது மற்றொரு நபிமொழியாகவே கருதப்படும்.

இந்நூலின் பயன்

பின்வரும் கணக்கீட்டை அறியும்போதுதான் இந்நூலின் பயன் என்னவென்று புரியும். நாம் மேலே குறிப்பிட்ட பதினான்கு நூல்களில் உள்ள ஹதீஸ்களின் மொத்த எண்ணிக்கை (1,14,194) ஒரு இலட்சத்துப் பதினான்காயிரத்து நூற்றுத் தொண்ணூற்று நான்கு ஆகும். திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ள ஹதீஸ்களை நீக்கிய பின் இதன் மொத்த எண்ணிக்கை (28,430) இருபத்தெட்டாயிரத்து நானூற்று முப்பது ஆகும்.

மேற்கண்ட இரண்டு எண்ணிக்கைகளையும் ஒப்பிட்டு நோக்கினால் இரண்டாவது எண்ணிக்கை முதல் மொத்த எண்ணிக்கையில் கால் பகுதியே உள்ளது. இதன்மூலம் இந்த நூல் மாணவர்களுக்கும் வாசகர்களுக்கும் எவ்வளவு நேரத்தைச் சேமித்துத் தந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

இந்நூலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நூல்களின் தரம்

இந்நூலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நூல்கள் யாவும் மிக முக்கியமானவையாகவும் நபிமொழிகள் குறித்த நூல்களில் மேன்மையானவையாகவும் கருதப்படுகின்றன. மற்ற ஹதீஸ் நூல்களைவிட அவற்றையே மார்க்க அறிஞர்கள் முன்னிலைப்படுத்தியுள்ளதோடு அவற்றின் உயர்வைப் புகழ்ந்து கூறியுள்ளார்கள். அவ்வாறு மார்க்க அறிஞர்கள் புகழ்ந்து கூறிய முக்கியமான சில கூற்றுகளைச் சுருக்கமாக இங்கே பதிவுசெய்கிறேன்.

இமாம் அந்நவவீ:

கண்ணியமிகு குர்ஆனுக்கு அடுத்தபடியாக மிகவும் ஆதாரப்பூர்வமான நூல்கள் புகாரீ, முஸ்லிம் ஆகிய நூல்களே ஆகும் என்பதில் மார்க்க அறிஞர்கள் ஒருமித்த கருத்தைத் தெரிவித்துள்ளார்கள். இதை முஸ்லிம் சமுதாயமும் ஏற்றுக்கொண்டுள்ளது என இமாம் அந்நவவீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.

அல்லாமா அல்கத்தானீ:

அர்ரிஸாலத்துல் முஸ்தத்ரஃபா எனும் நூலில் பேரறிஞர் முஹம்மத் பின் ஷஅஃபர் அல்கத்தானீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளதாவது: ஹதீஸ் நூல்களில் தொடக்கநிலை மாணவர்கள் படிக்க வேண்டிய மிகவும் தலையாய நூல்கள் ஆறு ஆகும். அவை: ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், சுனன் அபிதாவூத், ஜாமிஉத் திர்மிதீ, சுனனுன் நஸாயீ, சுனன் இப்னுமாஜா. இவையே ஹதீஸ் நூல்களில் பிரபலமானவையும் அடிப்படையானவையும் ஆகும்.

இப்னுஸ் ஸலாஹ், நவவீ, இப்னு ஹஜர்:

(மேற்கண்ட ஆதாரப்பூர்வமான ஆறு நூல்களுள்) ஆறாவதாக முஸ்னதுத் தாரிமீ இருப்பது மிகவும் ஏற்றமானது என்று கூறியுள்ளனர்.

இப்னுல் அதீர்:

ஜாமிஉல் உஸூல் எனும் நூலாசிரியர் இப்னுல் அதீர் ரஹிமஹுல்லாஹ், மூஅத்தா எனும் நூலை ஆறாவதாக ஆக்கியுள்ளார்கள்.

பேரறிஞர் கத்தானி:

மேற்கண்ட ஆறு ஹதீஸ் நூல்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்பதைவிட்டுத் தாண்ட முடியாது. அவற்றையே ஆய்வாளர்கள் தம் ஆய்வுக்காக நம்பியுள்ளார்கள். அவற்றின் ஒளியில்தான் வழிகேட்டில் சென்றவர் நல்வழி பெறுகிறார். அவற்றின் ஈர்த்தால் உள்ளங்கள் குளிர்ச்சியடைகின்றன.

இமாம் அஹ்மத் பின் ஹன்பல்:

(என்னுடைய) முஸ்னத் எனும் நூலை ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ஹதீஸ்களைவிட அதிகமானவற்றை ஒன்றுசேர்த்து, அவற்றை ஆய்வுசெய்து, உறுதிசெய்து அவற்றிலிருந்தும்தான் குறிப்பிட்ட ஹதீஸ்களைத் தொகுத்துள்ளேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஏதேனும் ஒரு ஹதீஸில் உங்களுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் (என்னுடைய முஸ்னத் நூலான) அந்த நூலையே எடுத்துப் பாருங்கள். அதில் நீங்கள் தேடிய ஹதீஸ் கிடைத்தால் பெற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல் அது ஹதீஸ் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இமாம் இப்னுஸ் ஸலாஹ்:

அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகீ எனும் நூலை மாணவர்கள் படிக்காமல் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் பாட வரிசை அமைப்பில் அதுபோன்றதொரு நூலை நாம் அறியோம்.

இமாம் அஸ்ஸுப்கீ:

ஹதீஸ் கலையில் அஸ்ஸுனனுல் குப்ரா எனும் நூலைப்போன்று எந்த நூலும் தொகுக்கப்படவில்லை. அதன் ஒழுங்கமைப்பும் கட்டமைப்பும் தரமும் போற்றத்தக்கவை.

இமாம் அஸ்ஸகாஃபீ:

அஸ்ஸுனன் பைஹகீ எனும் நூல் ஹதீஸ்களில் உள்ள பெரும்பாலான சட்டங்களை உட்கொண்டுள்ளது. அதன் பாட வரிசை அமைப்பைப்போல் வேறொன்றை நாம் அறியோம்.

அர்ரிஸாலத்துல் முஸ்தத்ரஃபா (அல்கத்தானீ):

ஹதீஸ் நூல்களில் மூஅத்தா, ஸஹீஹைன் (புகாரீ, முஸ்லிம்) ஆகிய நூல்களைத் தாண்டி 'ஸஹீஹ்' எனும் தரத்தில் வேறு சில நூல்களும் உண்டு என ஹதீஸ்துறை அறிஞர்கள் கூறியுள்ளனர். அவை: அபூஅப்தில்லாஹ் பின் குஸைமா தொகுத்துள்ள ஸஹீஹ் இப்னு குஸைமா எனும் நூல். இவர் ஹதீஸ்துறை அறிஞர்களிடம் 'இமாமுல் அயிம்மா' (இமாம்களுக்கெல்லாம் இமாம்) என்று அறியப்படுகிறார். முஹம்மது பின் ஹிப்பான் ரஹிமஹுல்லாஹ் தொகுத்துள்ள ஸஹீஹ் அபீ ஹாத்திம் எனும் நூல். அல்ஹாகிம் அந்நைஸாபூரீ ரஹிமஹுல்லாஹ் தொகுத்துள்ள ஸஹீஹ் அபீ அப்தில்லாஹ் எனும் நூல்.

பேரறிஞர் அஹ்மத் ஷாகிர்:

ஸஹீஹ் இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் ரஹிமஹுல்லாஹ் தொகுத்துள்ள அல்முஸ்னதுஸ் ஸஹீஹ் அலத் தக்காஸீம் வல்அன்வாஉ, ஹாகிம் ரஹிமஹுல்லாஹ் தொகுத்துள்ள அல்முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் ஆகிய இம்மூன்று நூல்களும், புகாரீ, முஸ்லிம் ஆகிய ஸஹீஹான நூல்களுக்குப் பிறகு ஸஹீஹான ஹதீஸ்கள் மட்டும் தொகுக்கப்பெற்றுள்ள மிக முக்கியமான நூல்கள் ஆகும்.

அர்ரிஸாலத்துல் முஸ்தத்ரஃபா (அல்அஹாதீஸுல் முக்தாரா குறித்து):

எரியாவுத்தீன் அல்மக்தஸீ ரஹிமஹுல்லாஹ் தொகுத்துள்ள அல்அஹாதீஸுல் ஷியாதுல் முக்தாரா எனும் நூல் ஸஹீஹைன் நூல்களுள் ஒன்றாக இல்லை. எனினும் அதில் ஸஹீஹ் எனும் தரம் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதற்குமுன் வேறு நூல்களில் காணப்படாத ஸஹீஹான பல ஹதீஸ்கள் இதில் கூறப்பட்டுள்ளன. அவை மூலம் இந்நூல் மேலோங்கி நிற்கிறது. எனினும் மிகச் சில ஹதீஸ்களே அதற்குக் குறைவான தரத்தில் உள்ளன. இந்நூலின் ஸஹீஹ் உடைய தரம் ஹாகிம் உடைய ஸஹீஹ் தரத்தைவிட மேலானது என்று இப்னு தைமிய்யா, ஸரக்ஜீ உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.

ஹதீஸ் துறையில் குறிப்பிடத்தக்க சில அறிஞர்களின் மேற்கண்ட கூற்றுகள் நாம் இந்நூலுக்காக எடுத்துக்கொண்டுள்ள பதினான்கு நூல்களின் முக்கியத்துவத்தையும் மேன்மையையும் குறித்து அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

பேரறிஞர் முஹம்மத் பின் ஷஅஃபர் அல்கத்தானீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளதைப்போல், ஹதீஸ் நூல்களில் தலையானவையும் அடிப்படையானவையுமாக இந்த ஆறு (ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஸுனன் அபிதாவூத், ஜாமிஉத் திர்மிதீ, ஸுனனுன் நஸாயீ, ஸுனன் இப்னுமாஜா) நூல்களே உள்ளன. அந்த வகையில் இவை ஸஹீஹான எந்த ஹதீஸையும் விட்டுவைக்கவில்லை என்றே கூறலாம். மிக அரிதானவை விடுபட்டிருக்கலாம். எனவேதான் நான் இந்தப் பதினான்கு நூல்களைத் தேர்ந்தெடுத்து இந்நூலைத் தொகுக்க முற்பட்டேன்.

ஆக இந்தத் தொகுப்பு ஸஹீஹான எந்த ஹதீஸையும் பதிவு செய்யாமல் விட்டுவிடாது என்பதே பெரும்பாலோரின் எண்ணம். உண்மையில் அந்த எண்ணம் ஏற்பட்டுவிட்டால், இந்த நூலில் தொகுக்கப்பெற்றுள்ள ஒவ்வொரு ஹதீஸும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தவிர்க்க முடியாது. யார் இதை வாசிக்கும் நற்பேறு பெறுகின்றாரோ அவர் ஹதீஸ்கள் எனும் ஒரு மாபெரும் களஞ்சியத்தை முற்றிலுமாகத் தெரிந்துகொண்டவராக ஆகிவிடுவார்.

இந்நூலின் நோக்கம்

இந்த நூலைத் தொகுத்த நோக்கம் என்னவெனில், ஒவ்வொரு முஸ்லிமும் தாம் விரும்புகின்ற எந்தத் துறையாக இருந்தாலும் — அது உலகியல் சார்ந்ததாகவோ மார்க்கம் சார்ந்ததாகவோ — அவர் அது சார்ந்த ஹதீஸைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக விளக்கிக்கூறப்பெற்றுள்ள ஹதீஸை நோக்கி அவரை மடை மாற்ற வேண்டும் என்பதே ஆகும்.

மற்றொரு வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால் எல்லா ஹதீஸ்களையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் தொகுப்பாக இந்நூல் இருக்க வேண்டும்; ஒவ்வொரு துறையிலும் நபி அவர்களின் கூற்றுகள், செயல்பாடுகள் குறித்துத் தேடுகின்ற வாசகருக்கு அது கிடைக்கவில்லை என்ற குறை இருக்கக்கூடாது என்பதே என் இலக்கு.

இந்த இலக்கை அடைய கீழ்க்கண்ட சில விஷயங்கள் இன்றியமையாதவை ஆகும்.

1. இந்நூலின் உட்கருத்தை ஒருங்கிணைத்தல்

நாம் மேலே குறிப்பிட்ட பதினான்கு நூல்களில் உள்ள ஹதீஸ்களின் மொத்த எண்ணிக்கை (1,14,194) ஒரு இலட்சத்துப் பதினான்காயிரத்து நூற்றுத் தொண்ணூற்று நான்கு என்றும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ள ஹதீஸ்களை நீக்கிய பின் அதன் மொத்த எண்ணிக்கை (28,430) இருபத்தெட்டாயிரத்து நானூற்று முப்பதாகச் சுருங்கிவிட்டதையும் கண்டோம்.

எனினும் இந்த ஒருங்கிணைத்தல் ஆறு நூல்களில் பரவலாக வந்துள்ளது. அவை அல்ஜாமிஉ பைனஸ் ஸஹீஹைன் அதனைத் தொடர்ந்து வெளிவந்துள்ள அஸ்ஸவாயிது எனும் நூல்கள். அவையே (22) இருபத்திரண்டு தொகுதிகள் உள்ளன.

ஆராய்ச்சிக் கண்ணோட்டத்தோடு ஹதீஸைப் படிக்க விரும்பும் ஒரு மாணவர் ஒரே அமைப்பில் தொகுக்கப்பெற்றுள்ள இந்த நூல்களில் தமக்கான தீர்வை அடைய இயலாது. எனவேதான் இந்தப் பதினான்கு நூல்களின் உட்கருத்தை ஒரே நூலாக ஒருங்கிணைப்பதே சிறந்தது என்று கருதினேன்.

2. நாடிய ஹதீஸ்களைத் தேர்வு செய்து அதை இந்நூலின் உரிய இடத்தில் வைத்தல்

மேற்கண்ட ஹதீஸ் நூல்களிலிருந்து ஹதீஸ்களை ஒருங்கிணைத்தபின், பல்வேறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ள ஒத்த கருத்துள்ள பல ஹதீஸ்கள் திரும்பத் திரும்பப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவையெல்லாம் இங்கு தேவையில்லை என்று நாமே கருதும்நிலை உண்டாகும். எனவேதான் இந்த நூலைத் தொகுக்கின்ற எனது திட்டத்தில் ஒரு ஹதீஸின் அடிப்படை வேர்ப்பகுதியைத் தெரிவுசெய்வது இன்றியமையாததாக ஆகிவிட்டது.

திட்டத்தில் தெளிவான நோக்கமும் இலக்கை நிர்ணயித்துக்கொள்ளலும் தேர்வு செய்வதில் உதவியாக இருக்கின்றன. அதேபோல் அது காலத்தையும் நேரத்தையும் சுருக்கிக்கொள்ளவும் உதவுகிறது.

நீண்ட ஆய்வுக்குப்பின் குறிப்பிட்ட ஹதீஸை ஒவ்வொரு பாடத்திலிருந்தும் தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அது இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது. முதலாவது, அந்தத் தலைப்பின்கீழ் உள்ள எல்லாச் சட்டங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இரண்டாவது அந்தத் தலைப்பின்கீழ் வரக்கூடிய எல்லா அர்த்தங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இவ்வளவு ஹதீஸ்களுள் பாடத்தலைப்பை உறுதிசெய்ய இயன்ற முறை என்னவெனில் ஆதாரப்பூர்வமான ஆறு நூல்களை-பதினான்கு நூல்களும் உள்ளடக்கியவற்றை- ஒரே பாடத் தலைப்பின்கீழ் கொண்டுவர முயன்றேன். அதன்படி அந்தத் தலைப்பின்கீழ் இந்த ஆறு நூல்களில் வரக்கூடிய ஹதீஸ்களைப் படித்துத் தெரிந்துகொண்டபின் மேற்கண்ட இரண்டு நோக்கங்களை நிறைவேற்றும் ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்தேன். இந்த ஹதீஸ்களின் குறைவான பகுதியையும் அதிகமான பகுதியையும் பார்க்கத் தொடங்கினேன். ஏனென்றால் நமது நோக்கமானது, குறிப்பிட்ட தலைப்பின்கீழ் உள்ள ஹதீஸ்களின் சட்டங்களையும் அர்த்தங்களையும் முழுமையாக நிறைவேற்றுவதே ஆகும்.

மேற்கண்ட இரண்டு நிபந்தனைகளுக்கேற்பச் செயல்படும்போது மீண்டும் மீண்டும் வரக்கூடிய அல்லது ஒத்த கருத்துக்களைக்கொண்ட அல்லது ஒத்த கருத்தை நெருங்கிய ஹதீஸ்களை நீக்க வேண்டிய தேவை ஏற்படும். ஆகவே அவற்றை நீக்கிவிட்டோம்.

ஏற்கனவே நான் கூறியபடி, மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஹதீஸ்களை நீக்குதல் என்பது இரண்டு வகை ஆகும். ஒரே அறிவிப்பாளரின் ஹதீஸ் ஆறு நூல்களிலும் ஒரேவிதமாக இடம்பெறுதல் என்பது ஒரு வகை. வேறு வேறு அறிவிப்பாளர்கள் ஒரேவிதமான ஹதீஸை அறிவிப்பது மற்றொரு வகை. இவ்விரண்டுமே தக்ரார்-மீண்டும் மீண்டும் அறிவித்தல் எனும் வகையைச் சார்ந்தத்துதான்.

சான்றாக, "போர் என்பதே ஏமாற்றம்தான்" எனும் நபிமொழி புகாரீ, முஸ்லிம், முஸ்னது அஹ்மத் ஆகிய நூல்களில் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து மூன்று தடவை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இது தக்ரார்-மீண்டும் மீண்டும் அறிவித்தல் எனும் வகையைச் சார்ந்ததாகும். ஏனென்றால் ஒரே நபித்தோழரிடமிருந்து மூன்று தடவை வந்துள்ளது எனவே இந்த ஹதீஸை ஒரு தடவை கூறினால் போதுமெனக் கருதி ஒரு தடவை மட்டுமே பதிவுசெய்துள்ளேன்.

எனினும் "போர் என்பதே ஏமாற்றம்தான்" எனும் இதே நபிமொழியை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அல்லாத வேறு நபித்தோழர்களான ஷாபிர் பின் அப்தில்லாஹ், இப்னு அப்பாஸ், கஅப் பின் மாலிக், ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய இந்த அறிவிப்புகள் தக்ராராகக் கருதப்படாது. எனவே ஷாபிர் அவர்களின் ஹதீஸ் இப்னு அப்பாஸ் அவர்களின் ஹதீஸுக்கு அல்லது கஅப் பின் மாலிக் அவர்களின் ஹதீஸுக்கு அல்லது ஆயிஷா அவர்களின் ஹதீஸுக்கு தக்ரார் இல்லை எனினும் அவர்களுள் ஒவ்வொருவரின் அறிவிப்பும் ஒரே பொருளையே தாங்கி நிற்கிறது.

எனவே இது போன்ற ஹதீஸ்களையும் நான் இந்த நூலில் ஒரே ஒரு தடவைதான் கூறியுள்ளேன். ஏனென்றால் ஒரே பொருள் அல்லது ஒரே சட்டத்தை ஒரு தடவை கூறுவதுதான் எனது நோக்கமாகும்.

அவ்வாறே ஒத்த கருத்துள்ள அல்லது நெருக்கமான பொருளைக்கொண்டுள்ள ஹதீஸ்களையும் ஒரு தடவை கூறுவதோடு நிறுத்திக்கொண்டுள்ளேன். இது வாசகர்களைச் சலிப்படையச் செய்யாமல் இருப்பதிலும் நூலின் பக்கங்களைக் குறைப்பதிலும் உதவிபுரிகிறது.

இந்த முறையை நான் மேற்கொண்டதால் மொத்த ஹதீஸ்களின் எண்ணிக்கை 28,430 இலிருந்து 3,921ஆகக் குறைந்துவிட்டது. இந்த நூலின் ஹதீஸ்களுடைய எண்ணிக்கையும் அதுதான்.

3. ஸஹீஹான ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்தல்

ஸஹீஹ், ஹஸன் ஆகிய ஹதீஸ்களோடு சுருக்கிக்கொள்ளவே நான் மிகுதியாகப் பாடுபட்டுள்ளேன். அதேநேரத்தில் ளஈஃப் வகை ஹதீஸ்களைப் பின்வரும் தவிர்க்க முடியாத நிலைகளில் மட்டும் முன்வைத்துள்ளேன்.

ஸஹீஹான ஹதீஸில் உள்ள பொருள்களுள் ஏதேனும் ஒன்றை விளக்கிக்கூறுவதாகவும் தெளிவுபடுத்துவதாகவும் அந்த ளஈஃப் வகை ஹதீஸ் இருந்தால், விளக்கவுரை என்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டு அதைப் பதிவுசெய்துள்ளேன்.

அந்த ளஈஃப் வகை ஹதீஸ் மொழியைக் குறித்து அறிவிப்பதாகவும் அந்தப் பாடத் தலைப்பில் அதை விட்டால் வேறு ஹதீஸ் இல்லை எனும் நிலை ஏற்பட்டால் அப்போது அந்த ஹதீஸ் பலவீனமானது என்ற தகவலைச் சொல்லிவிட்டு அதை எடுத்தாண்டுள்ளேன்.

ஒரு பாடத் தலைப்பில் உள்ள எல்லா ஹதீஸ்களுமே ளஈஃப் தரத்தில் இருந்தால், அமல்களின் சிறப்புகளைக் கூறுகின்ற இட்டுக்கட்டப்படாதவையாக இருந்தால், நான் இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி கூறியுள்ளேன். அதாவது ஹதீஸைச் சொல்லிவிட்டு அதன் தரத்தையும் சொல்லிவிடுவேன்.

ஆக మొత్తத்தில் ளஈஃப் தரத்திலான ஹதீஸ்களைக் குறைந்த அளவே கூறியுள்ளேன். அவை முப்பத்து மூன்றாகும். மேலும் ஹஸன் தரத்தில் உள்ள பத்து ஹதீஸ்களை அறிஞர்கள் சிலர் ளஈஃப் என்று கூறியுள்ளார்கள். அதேநேரத்தில் முற்றிலும் ளஈஃப் தரத்திலான ஹதீஸை நான் எடுத்தாளவில்லை.

அத்தோடு நான் எடுத்தாண்டுள்ள இந்த ஹதீஸ்கள் மற்றவற்றைவிடத் தெளிவானவைகயாகவும் தனித்தும் காணப்படும். அதற்கான காரணம் நான் எந்தவிதப் பாரபட்சமும் பார்க்காமல் ஹதீஸ்களைக் கையாள்வதில் குறிப்பிட்ட வரைமுறையைப் பேணியுள்ளேன் என்பதே ஆகும்.

இவ்விடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த நூலில் கூறப்பட்டுள்ள சான்றுமிக்க நூல்களான புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டின் ஹதீஸ்களின் எண்ணிக்கை ஈராயிரத்து நூற்று முப்பத்தொன்று (2131) ஆகும். அதாவது இந்நூலுடைய ஹதீஸ்களின் பாதியைவிடக் கூடுதலாக ஸஹீஹான ஹதீஸ்களே உள்ளன. தெளிவாகச் சொன்னால் 55 சதவீகித ஹதீஸ்கள் அவ்விரண்டு நூல்களிலிருந்து மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதுவே இந்நூல் எந்த அளவிற்கு ஸஹீஹ் தரத்தில் உள்ளது என்பதற்கான சான்றாகும்.

4. ஹதீஸ்களை ஒழுங்கமைத்தலும் அவற்றின் மூலநூல்களைக் கூறலும்

பாடத்தின் தொடக்கத்தில் சான்றுமிக்க நூல்களான புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டின் ஹதீஸ்களும் பின்னர் சுனன் நூல்களின் ஹதீஸ்களும் அதன்பின்னர் முஸ்னது நூல்களின் ஹதீஸ்களும் பிறகு மற்ற நூல்களின் ஹதீஸ்களும் இடம்பெறும்.

ஒவ்வொரு ஹதீஸின் இறுதியிலும் அதன் மூலநூலைக் குறிக்கின்ற அடையாளங்களையும் எண்களையும் இட்டுள்ளேன். மூலநூலைக் குறிக்கின்ற அடையாளம் அந்த நூலைக் குறிக்கும். ஹதீஸ் எண் என்பது மூலநூலில் அந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ள எண்ணைக் குறிக்கும்.

சான்றுமிக்க நூல்களான புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டின் ஹதீஸ்களுக்கான அடையாளத்தைத் தனித்துக் காட்டியுள்ளேன். அந்த வகையில் காஃஃப் எனும் எழுத்து புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களிலும் அந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ள (முத்தஃபக் அலைஹி என்ப)தைக் குறிக்கும். 'ஃகா' எனும் எழுத்து புகாரியையும் 'மீம்' எனும் எழுத்து முஸ்லிம் என்ற நூலையும் குறிக்கும். புகாரீ, முஸ்லிம் அல்லாத நூல்களின் தரத்தை அது ஸஹீஹ் என்றோ ஹஸன் என்றோ அதனதன் தரத்தை அதன் இறுதியில் குறித்துள்ளேன். மேலும் நூல்களின் பெயர்களையும் எண்களையும் தமிழ் மொழிபெயர்ப்பின் இறுதியில் கூறியுள்ளேன்.

சான்றுமிக்க நூல்களான புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டின் ஹதீஸ்களுக்கான எண்களை மட்டுமே கூறியுள்ளேன். அந்த ஹதீஸ் வேறு எந்தெந்த நூல்களில் இடம்பெற்றுள்ளது என்பதை நான் கூறவில்லை. அவ்வாறே ஸுனன் வகை ஹதீஸ்களின் எண்களை மட்டுமே கூறியுள்ளேன். அந்த ஹதீஸ் வேறு எந்தெந்த நூல்களில் இடம்பெற்றுள்ளது என்பதைக் கூறாமல் விட்டுவிட்டேன். அவற்றுள் பெரும்பாலானவை முஸ்னது எனும் நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்தே அவ்வாறு செய்துள்ளேன். மேலும் அடிக்குறிப்புகளும் எண்களும் மிகுதியாக ஆவதைத் தவிர்ப்பதற்காகவே அவ்வாறு செய்துள்ளேன். யார் அவற்றை நுணுக்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறாரோ அவர் அவற்றின் மூலநூல்களில் தேடிப் பெற்றுக்கொள்ளலாம்.

5. ஒருங்கிணைந்த இந்நூலிலுள்ள ஹதீஸ்களின் எண்ணிக்கை

பதினான்கு ஹதீஸ் நூல்களின் மொத்த எண்ணிக்கை (1,14,194) ஒரு இலட்சத்துப் பதினான்காயிரத்து நூற்றுத் தொண்ணூற்று நான்கிலிருந்து திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ள ஹதீஸ்களை நீக்கிய பின் இதன் மொத்த எண்ணிக்கை (3,921) மூவாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தொன்று ஆகும். இந்தத் தகவலை ஏற்கனவே கூறியுள்ளேன்.

மேற்கண்ட இந்த எண்ணிக்கை இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் தொகுத்துள்ள ஷாமிஉத் திர்மிதி எனும் நூலின் எண்ணிக்கையை (3,956) ஏறத்தாழ எட்டுகிறது.

இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் உள்ளிட்ட ஏனைய இமாம்கள் அனைவரும் தம்மிடம் கைவசமிருந்த இலட்சக்கணக்கான ஹதீஸ்களிலிருந்து சுருக்கித்தான் தம்முடைய நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவர்களுள் ஒவ்வொருவரும் தத்தமது ஆய்வுக்குப்பின் ஒரு முஸ்லிமின் தேவையை நிறைவேற்ற எவ்வளவு ஹதீஸ்கள் வேண்டுமெனத் தேர்ந்தெடுத்தே பதிவு செய்துள்ளார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இமாம் அபூதாவூத் ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளதாவது: "நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கிடைத்த ஐந்து இலட்சம் ஹதீஸ்களை எழுதினேன். பிறகு இந்த (ஸுனன் அபூதாவூத் எனும்) நூல் உள்ளடக்கியுள்ள இந்த எண்ணிக்கை அளவிற்குத் தேர்ந்தெடுத்துள்ளேன்." இவ்வாறே மற்ற நூலாசிரியர்களின் நிலையும் உள்ளது.

ஆக நம்முடைய இந்த நூல் பதினான்கு நூல்களை நன்கு ஆய்வு செய்தபின் கிடைத்த பலன் ஆகும். அதுவே இப்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. எனவே நாம் அந்த நூல்களைத் தொகுத்த ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தி, துஆ செய்து கொள்வோம்.

முக்கிய குறிப்புகள்

  • இந்த நூல்களையெல்லாம் ஆய்வு செய்து முடித்தபின், ஹதீஸ் நூல்களின் பக்கங்களைக் குறைக்க முடிந்தது. மொத்த ஹதீஸ்களின் எண்ணிக்கை இத்தனைக்குள் அடங்கிவிடும் என்று நான் கற்பனை செய்துக்கூடப் பார்க்கவில்லை.
  • புகாரீ, முஸ்லிம் ஆகிய சான்றுமிக்க இரண்டு நூல்களிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட ஹதீஸ்களின் எண்ணிக்கை ஈராயிரத்து நூற்று முப்பத்தொன்று (2,131) ஆகும். அதாவது இந்த நூலின் ஐம்பத்தைந்து (55) சதவீகித ஹதீஸ்களை உள்ளடக்கியுள்ளது. இதுவே புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களின் உயர்மதிப்பைத் தெரிவிப்பதாக உள்ளது. அவ்விரண்டு நூல்களின் ஹதீஸ்களே இந்நூலின் பாதியைவிட மிகுதியாக இடம்பெற்றுள்ளது.
  • இந்த நூலில் ஒன்பது நூல்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஹதீஸ்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து அறுநூற்றுத் தொண்ணூற்று ஒன்று (3,691) ஆகும். இது இந்நூலில் 94 சதவீதம் ஆகும். மற்றொரு வார்த்தையில் சொல்லவேண்டுமாயின் இந்த ஒன்பது நூல்களின் ஹதீஸ்களே நபியவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் உள்ளடக்கிக்கொள்கின்றன. இவை அல்லாத மற்ற நூல்களிலிருந்து சில ஹதீஸ்கள் கிடைத்தாலும் அவற்றிலிருந்து இஸ்லாமியச் சட்டங்களை எடுக்கும் விதத்தில் அவை அமைந்திருக்கவில்லை. சிறப்புகள் குறித்து வேண்டுமானால் அவை தெரிவிக்கலாம். ஏனென்றால் அவற்றையெல்லாம் பூர்த்தி செய்யும் விதத்தில் ஏற்கனவே அந்த ஒன்பது நூல்களிலேயே ஹதீஸ்கள் அனைத்தும் கிடைத்துவிட்டன.
  • அந்த ஒன்பது நூல்களுக்குப்பின் எஞ்சியுள்ள ஐந்து நூல்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஹதீஸ்களின் மொத்த எண்ணிக்கை இருநூற்று முப்பது (230) ஆகும். ஆனால் இந்த ஐந்து நூல்களில் உள்ள மொத்த ஹதீஸ்களின் எண்ணிக்கையோ நாற்பத்து ஆறாயிரத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று (46,741) ஆகும். எந்த அளவிற்கு ஆய்வு செய்து ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்பதை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.

பத்து பெருந்தலைப்புகள்

இந்த நூல் கீழ்க்காணும் பத்து பெருந்தலைப்புகளில் அமைந்துள்ளது.

கொள்கைகள்
கல்வியும் அதன் அடிப்படைகளும்
வழிபாடுகள்
குடும்பச் சட்டங்கள்
இன்றியமையாத் தேவைகள்
கொடுக்கல் வாங்கல்கள்
இமாமத் - அது சார்ந்த சட்டங்கள்
தத்துவங்கள், நற்பண்புகள், ஒழுக்கங்கள்
வரலாறு, மாண்புகள்
குழப்பங்கள்

மேற்கண்ட பத்துப் பெருந்தலைப்புகளின்கீழ் (கிதாப், ஃபஸ்ல், பாப்) பாகம், பிரிவு, பாடம் எனும் விதத்தில் உபதலைப்புகளில் ஹதீஸ்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஹதீஸின் கீழும் ஸஹீஹ், ஹஸன் உள்ளிட்ட அதனதன் தரத்தைக் கூறியுள்ளேன். பின்வரும் முறைப்படி இதன் சட்ட நுணுக்கங்கள் அமைந்துள்ளன.

ஸுனனுல் அர்பஆ (திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா, நஸாயீ எனும்) நான்கு நூல்களின் தரத்தை ஷைக் நாஸிருத்தீன் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் தர மதிப்பீட்டின்படி கூறியுள்ளேன்.

ஸுனனுத் தாரிமீ எனும் நூலை உஸ்தாத் ஹுஸைன் ஸலீம் அஸதுத் தாரானீ ரஹிமஹுல்லாஹ் ஆய்வுசெய்து வெளியிட்டுள்ளார். அதையே இங்கு நான் தேர்வு செய்துள்ளேன்.

முஸ்னது இமாம் அஹ்மத் எனும் நூலை ஷைக் ஜூஜுப் அல்அர்னாஊத் என்பவர் ஆய்வு செய்துள்ளார். இதை மூஅஸ்ஸஸத்துர் ரிஸாலா எனும் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மூஅத்தா எனும் நூலை ஷைக் அப்துல் காதிர் அல்அர்னாஊத் ரஹிமஹுல்லாஹ் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார்.

ஸுனனுல் குப்ரா லில்பைஹகீ எனும் நூல் குறித்து அதன் ஆசிரியர் கூறுகிறார்: என்னால் தொகுக்கப்பட்ட நூல்களில், எந்தெந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையோ அவற்றை மட்டும் சொல்லி நான் நிறைவு செய்துகொள்வேன். ஆதாரமற்ற செய்திகளைச் சொல்ல மாட்டேன். அல்லது ஆதாரப்பூர்வமானவை எவை, ஆதாரமற்றவை எவை என்பதை வேறுபடுத்திக் காட்டிவிடுவேன்.

இந்த இமாமின் கூற்றின் அடிப்படையில் பார்த்தால், தஹபீ இமாம் தாம் பதிவுசெய்துள்ள ஹதீஸ்களின்கீழ் குறிப்பிட்டுள்ள விமர்சனங்களைப் போல் இந்த இமாம் தம் நூலில் ஸஹீஹ், ஹஸன் என்று விமர்சனம் செய்யவில்லை என்பதை அறிகிறோம்.

ஸஹீஹ் இப்னு குஸைமா எனும் நூலை டாக்டர் முஹம்மது முஸ்தஃபா அல்அஃழமீ ஆய்வு செய்துள்ளார். அவரே ஸஹீஹ், ஹஸன் என்று தரம் பிரித்துள்ளார். அவற்றுள் சில ஹதீஸ்களுக்கு ஷைக் அல்பானீ அவர்களின் விமர்சனத்தை எடுத்துக் கூறியுள்ளார்.

ஸஹீஹ் இப்னு ஹிப்பான் எனும் நூலை ஷைக் ஜூஜுப் அல்அர்னாஊத் என்பவர் ஆய்வு செய்து, அதிலுள்ள ஹதீஸ்களுக்கு விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளார்.

அல்முஸ்தத்ரக் (ஹாகிம்) எனும் நூலிலுள்ள சில ஹதீஸ்களை ஹாஃபிழ் தஹபீ ரஹிமஹுல்லாஹ் விமர்சனம் செய்துள்ளார்.

அல்அஹாதீஸுல் முக்தாரா லில்மக்தஸீ எனும் நூலை டாக்டர் அப்துல் மலிக் பின் தஹீஷ் ஆய்வு செய்து, அதிலுள்ள ஹதீஸ்களுக்கு விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளார்.

இந்நூலைத் தொகுக்கும் பணியை உயர்ந்தோன் அல்லாஹ்வே எனக்கு எளிமையாக்கிக் கொடுத்தான். எதை நோக்கமாகக் கொண்டு இந்நூலை நான் தொகுக்கத் தொடங்கினேனோ அந்த நோக்கத்தை அவன் நிறைவேற்றித் தர வேண்டுமென ஆவல்கொள்கிறேன். ஒவ்வொரு முஸ்லிமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியும் அவர்களின் வழிகாட்டல்களையும் படித்துத் தெரிந்துகொள்ள இது வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

பதினான்கு நூல்களே இந்நூலுக்கு அடிப்படையாகும். அந்தப் பதினான்கு நூல்களும் அந்தந்த நூலாசிரியரிடம் இருந்த இலட்சக்கணக்கான ஹதீஸ்களின் சுருக்கமே ஆகும். அவற்றிலிருந்துதான் ஒவ்வொரு நூலாசிரியரும் ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்துத் தம் நூல்களில் பதிவுசெய்துள்ளார்கள்.

அந்த வகையில் சுருக்கமான அந்தப் பதினான்கு நூல்களுக்கான சுருக்கமாகவே இந்தத் தொகுப்பு நூலை உங்கள்முன் சமர்ப்பிக்கிறேன். மேலும் அல்லாஹ்வின் அளப்பரும் கருணையால் அதன் சட்டங்களை நிறைவு செய்யும் வகையிலும் அவற்றின் பொருள்களை நிறைவேற்றும் வகையிலும் அமைத்துள்ளதாகக் கருதுகிறேன். "இறைவேதமும் அத்துடன் அதுபோன்றதும் நான் வழங்கப்பட்டுள்ளேன்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதற்கேற்ப உங்கள்முன் அதனைச் சமர்ப்பித்துள்ளேன்.

இந்த முன்னுரையின் கடைசியில் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். அதாவது எந்த நோக்கத்திற்காக இதை நான் தொகுக்கத் தொடங்கினேனோ அந்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் இந்நூல் திகழ வேண்டும் என்பதற்காக என் முயற்சிகள் அனைத்தையும் செலவிட்டிருக்கிறேன். என் பணி அந்த நோக்கத்தை அடைந்துவிட்டது என்றோ மற்ற பணிகள் அதன்முன் நிற்க முடியாது என்றோ நான் வாதிட மாட்டேன்.

ஏனென்றால் மனிதன் செய்கிற எந்தச் செயலும் முற்றிலும் முழுமை பெற்றுவிடாது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதுவே மனிதச் செயல்களின் இயல்புநிலையாகும். குறிப்பாகத் தனிப்பட்ட மனிதரின் செயலாக இருந்தால் அது குறை எனும் நிலையிலிருந்து தப்ப முடியாது. எனவே உயர்ந்தோன் அல்லாஹ்விடம் என் சறுக்குதல்களிலிருந்தும் குறைபாடுகளிலிருந்தும் மன்னிப்பை வேண்டுகிறேன்.

இந்நூலை இறுதியாக மெய்ப்புத் திருத்தித் தந்த உஸ்தாத் அப்துஸ் ஸத்தார் ஷைக் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு அல்லாஹ் நற்கூலியை நல்குவானாக. அதை அவருடைய நன்மைகளின் எடைத்தட்டில் வைப்பானாக.

எங்கள் இறைவா! நாங்கள் மறந்துவிட்டதற்காகவோ தவறிழைத்துவிட்டதற்காகவோ எங்களைக் குற்றம் பிடித்துவிடாதே என்று பிரார்த்தனை செய்தவாறு முடித்துக்கொள்கிறேன். எங்கள் தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீதும் அவர்களின் குடும்பத்தார், அவர்கள்தம் தோழர்கள்மீதும் அல்லாஹ் அருள்புரிவானாக. அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்பதே எங்களின் இறுதிப் பிரார்த்தனையாகும்.

ஸாலிஹ் பின் அஹ்மது அஷ்ஜாமி