கண்ணியமான குர்ஆனை ஒருங்கிணைத்தல்
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ الْأَنْبِيَاءِ نَبِيٌّ إِلَّا أُعْطِيَ مَا مِثْلهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَيَّ فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ الْقِيَامَةِ . 423
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன . அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது . எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம் , அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு ( வஹீ ) தான் . ஆகவே , நபிமார்களிலேயே மறுமை நாளில் , பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் .
(ق) عَنْ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ اللَّهَ تَعَالَى تَابَعَ عَلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَحْيَ قَبْلَ وَفَاتِهِ حَتَّى تَوَفَّاهُ أَكْثَرَ مَا كَانَ الْوَحْيُ ثُمَّ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ. 424
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , தன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து " வஹீ ` ( வேத அறிவிப்பை ) அருளினான் . அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவிப்பு ( மற்ற காலங்களில் அருளப்பெற்றதைவிட ) அதிகமாக இருந்தது . அதற்குப் பின்னரே , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்தார்கள் .
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَكَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ ثَلَاثَ عَشْرَةَ وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ . 425
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( நபியாக்கப்பட்ட பின் ) மக்காவில் பதின் மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள் . தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள் .
(خ) عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِثَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ يُنْزَلُ عَلَيْهِ الْقُرْآنُ وَبِالْمَدِينَةِ عَشْرًا . 426
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம்மீது குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் ( தம் பிறந்தகமான ) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள் ; ( ஹிஜ்ரத்துக்குப் பின் ) மதீனாவில் பத்தாண்டுகள் இருந்தார்கள் .
عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - ، فِي قَوْلِهِ - تَعَالَى - : إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ قَالَ : أُنْزِلَ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً فِي لَيْلَةِ الْقَدْرِ إِلَى السَّمَاءِ الدُّنْيَا ، وَكَانَ بِمَوْقِعِ النُّجُومِ ، وَكَانَ اللَّهُ يُنَزِّلُهُ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ - بَعْضَهُ فِي أَثَرِ بَعْضٍ ، قَالَ : وَقَالُوا : لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً كَذَلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ وَرَتَّلْنَاهُ تَرْتِيلًا . 427
சஈத் பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நிச்சயமாக , நாம் அதை ( குர்ஆனை ) கண்ணியமிக்க ( லைலத்துல் கத்ர் ) இரவில் இறக்கினோம் (97: 1) என்று அல்லாஹ் கூறுவது குறித்து இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : கண்ணியமிக்க ( லைலத்துல் கத்ர் ) இரவில் ஒரே மொத்தமாக உலக வானிற்கு அருளப்பட்டது . ( பின்னர் ) அது நட்சத்திரங்கள் விழுமிடத்தில் இருந்தது . அல்லாஹ் அதனைத் தன் தூதருக்கு ( அவ்வப்போது ) கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினான் . ( நபியே !) எவர்கள் ( உங்களை ) நிராகரிக்கிறார்களோ அவர்கள் , “ இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் இறக்கப்படவேண்டாமா ?`` என்று கூறுகின்றனர் . ( இதனை ) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி ( வரிசை முறைப்படி ) ஒழுங்குபடுத்துவதெல்லாம் உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே ! ( அல்ஃபுர்கான் : 32) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள் .
(خ) عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ قَالَ دَخَلْتُ أَنَا وَشَدَّادُ بْنُ مَعْقِلٍ عَلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَ لَهُ شَدَّادُ بْنُ مَعْقِلٍ أَتَرَكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ شَيْءٍ قَالَ مَا تَرَكَ إِلَّا مَا بَيْنَ الدَّفَّتَيْنِ . 428
அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நானும் ஷத்தாத் பின் மஅகில் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம் . அப்போது இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஷத்தாத் ரஹிமஹுல்லாஹ் , “ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( உலகைப் பிரிந்தபோது , இந்தக் குர்ஆனில் இடம் பெறாத ) வேறு ( இறைவசனங்கள் ) எதையும் ( நம்மிடையே ) விட்டுச் சென்றார்களா ?`` என்று கேட்டார்கள் . இப்னு அப்பாஸ் ரஹிமஹுல்லாஹ் , “( இந்தக் குர்ஆனின் ) இரு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத்தான் ( இறை வேதமாக ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விட்டுச்சென்றார்கள் `` என்று பதிலளித்தார்கள் . நாங்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய புதல்வரான முஹம்மது பின் ஹனஃபிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் சென்று , இது குறித்துக் கேட்டோம் . அதற்கு அவர்கள் “ இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு பதிலளித்தது போன்றே “( இந்தக் குர்ஆனின் ) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத்தான் ( இறை வேதமாக ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விட்டுச் சென்றார்கள் `` என்று பதிலளித்தார்கள் .
(ق) عَنْ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ آخِرُ سُورَةٍ نَزَلَتْ كَامِلَةً بَرَاءَةٌ وَآخِرُ سُورَةٍ نَزَلَتْ خَاتِمَةُ سُورَةِ النِّسَاءِ يَسْتَفْتُونَكَ قُلْ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلَالَةِ . 429
பராஉ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : முழுமையான வடிவில் அருளப்பெற்ற கடைசி அத்தியாயம் , " பராஅத் ` (" அத்தவ்பா ` என்னும் 9-ஆம்) அத்தியாயம் ஆகும் . கடைசியாக அருளப்பெற்ற அத்தியாயப் பகுதி " அந்நிஸா`வின் இறுதிப் பகுதியாகும் . அந்த வசனம் வருமாறு : ( நபியே !) மக்கள் உங்களிடம் " கலாலா ` பற்றித் தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள் . நீங்கள் கூறுங்கள் : அல்லாஹ் உங்களுக்கு " கலாலா ` பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான் .... (4: 176)
(م) عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، قَالَ قَالَ لِيَ ابْنُ عَبَّاسٍ تَعْلَمُ وَقَالَ هَارُونُ تَدْرِي آخِرَ سُورَةٍ نَزَلَتْ مِنَ الْقُرْآنِ نَزَلَتْ جَمِيعًا قُلْتُ نَعَمْ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ قَالَ صَدَقْتَ . 430
உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என்னிடம் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு , “ குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற முழு அத்தியாயம் எதுவென உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . நான் , “ ஆம் ; " அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால் ...` என்று தொடங்கும் (110ஆம்) அத்தியாயமே அது `` என்று பதிலளித்தேன் . அதற்கு அவர்கள் ,” உண்மைதான் `` என்றார்கள் .
عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقَالَتْ هَلْ تَقْرَأُ سُورَةَ الْمَائِدَةِ قَالَ قُلْتُ نَعَمْ قَالَتْ فَإِنَّهَا آخِرُ سُورَةٍ نَزَلَتْ فَمَا وَجَدْتُمْ فِيهَا مِنْ حَلَالٍ فَاسْتَحِلُّوهُ وَمَا وَجَدْتُمْ فِيهَا مِنْ حَرَامٍ فَحَرِّمُوهُ وَسَأَلْتُهَا عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ الْقُرْآنُ . 431
ஜுபைர் பின் நுஃபைர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்றேன் . அப்போது அவர்கள் , “ நீ அல்மாயிதா அத்தியாயத்தை ஓதுகிறாயா ?” என்று கேட்டார்கள் . “ ஆம் ” என்றேன் . “ அதுதான் கடைசியாக இறங்கிய அத்தியாயமாகும் . அதில் நீங்கள் ஆகுமானதெனக் கண்டதை ஆகுமாக்குங்கள் . தடைசெய்யப்பட்டதெனக் கண்டதைத் தடைசெய்துவிடுங்கள் ” என்று கூறினார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணத்தைக் குறித்து நான் அவர்களிடம் கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ குர்ஆன் ( ஆக இருந்தது )” என்று கூறினார்கள் .
عَنْ عَائِشَةَ قَالَتْ : إِنَّ أَوَّلَ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ. 432
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் ( பொருள் : - உம்மைப்-படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக . - அல்அலக் ) என்று தொடங்கும் அத்தியாயமே முதன் முதலில் இறங்கியது .
عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : " تَعَلَّمْنَا الْقُرْآنَ فِي هَذَا الْمَسْجِدِ يَعْنِي مَسْجِدَ الْبَصْرَةِ وَكُنَّا نَجْلِسُ حِلَقًا حِلَقًا وَكَأَنَّمَا أَنْظُرُ إِلَيْهِ بَيْنَ ثَوْبَيْنِ أَبْيَضَيْنِ وَعَنْهُ أَخَذْتُ هَذِهِ السُّورَةَ:اقْرَأْ بِاسْمِ رَبِّكِ الَّذِي خَلَقَ 433
அபூரஜா அல்உத்தாரிதீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாங்கள் பஸ்ராவின் மஸ்ஜிதில் வைத்து குர்ஆனைக் கற்றோம் . நாங்கள் வட்ட வட்டமாக அமர்ந்துகொண்டிருந்தோம் . ( அவர்கள் உடுத்தியிருந்த ) இரண்டு வெண்ணிற ஆடைகளில் அவர்களை ( இப்போதும் ) காண்பதைப் போன்று உள்ளது . அவர்களிடமிருந்துதான் இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் ( பொருள் : - உம்மைப்-படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக ) என்று தொடங்கும் அத்தியாயத்தைக் கற்றேன் . ( அப்போது ) “ முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பெற்ற அத்தியாயங்களுள் இதுவே முதலாவது ஆகும் ” என்று கூறினார்கள் .
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : آخِرُ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ : لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ . 434
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆனில் கடைசியாக இறங்கியது இதுதான் : ( இறைநம்பிக்கை கொண்டோரே ! நம்முடைய ) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார் ; அவர் உங்களிலுள்ளவர்தாம் . ( உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு ) நீங்கள் சிரமத்திற்குள்ளாகிவிட்டால் , அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும் . ( அந்த அளவிற்கு உங்கள்மீது அன்புடையவர் .) மேலும் உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும் , நம்பிக்கையாளர் ( களாகிய உங் ) கள்மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார் . (9: 128)
(خ) عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، قَالَ بَعَثَ إِلَىَّ أَبُو بَكْرٍ لِمَقْتَلِ أَهْلِ الْيَمَامَةِ وَعِنْدَهُ عُمَرُ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّ عُمَرَ أَتَانِي فَقَالَ إِنَّ الْقَتْلَ قَدِ اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِقُرَّاءِ الْقُرْآنِ، وَإِنِّي أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِقُرَّاءِ الْقُرْآنِ فِي الْمَوَاطِنِ كُلِّهَا، فَيَذْهَبَ قُرْآنٌ كَثِيرٌ، وَإِنِّي أَرَى أَنْ تَأْمُرَ بِجَمْعِ الْقُرْآنِ. قُلْتُ كَيْفَ أَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ عُمَرُ هُوَ وَاللَّهِ خَيْرٌ. فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِي فِي ذَلِكَ حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِي لِلَّذِي شَرَحَ لَهُ صَدْرَ عُمَرَ، وَرَأَيْتُ فِي ذَلِكَ الَّذِي رَأَى عُمَرُ. 435
( வேத அறிவிப்பை எழுதியோருள் ஒருவரான ) ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யமாமா ( போரில் ) வீரர்கள் கொல்லப் பட்டபோது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு ( என்னை அழைத்து வரும்படி ) ஆளனுப்பினார்கள் . ( நான் சென்றேன் .) அங்கே அவர்களுடன் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள் . அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : உமர் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம் வந்து , இந்த யமாமா போர் , குர்ஆன் அறிஞர்கள் பலரைப் பலிகொண்டு விட்டது . ( இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும் ) எல்லா இடங்களிலும் குர்ஆன் அறிஞர்கள் பலர் கொல்லப்பட்டு அதனால் குர்ஆனில் பெரும்பகுதி ( அந்த நெஞ்சங்களுடன் அழிந்து ) போய்விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன் . ஆகவே , ( கலீஃபாவான ) நீங்கள் குர்ஆனைத் திரட்டுமாறு ஆணையிட வேண்டுமென நான் கருதுகின்றேன் `` என்று கூறினார்கள் . அதற்கு நான் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்ய முடியும் ?`` என்று - உமர் அவர்களிடம் - கேட்டேன் . அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! இது நன்மை ( யான பணி ) தான் `` என்று கூறினார்கள் . இது விஷயமாக தொடர்ந்து உமர் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள் . முடிவில் , உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனத்தை அல்லாஹ் எதற்காக விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அவன் விரிவாக்கினான் ; இது விஷயத்தில் உமர் ரளியல்லாஹு அன்ஹு கருதியதையே நானும் ( உசிதமானதாகக் ) கண்டேன் . பிறகு அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு ( என்னிடம் ), “ நீங்கள் புத்திசாலியான இளைஞர் ; உங்களை நாங்கள் ( எந்த விதத்திலும் ) சந்தேகப்பட்டதில்லை . நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக வஹீ ( வேத அறிவிப்பை ) எழுதக்கூடியவராக இருந்தீர்கள் . எனவே , ( தனித்தனிப் பிரதிகளில் பல்வேறு நபித்தோழர்களிடம் உள்ள ) குர்ஆன் வசனங்களைத் தேடி ( ஒரே பிரதியில் ) ஒன்றுதிரட்டுங்கள் `` என்று சொன்னார்கள் . அல்லாஹ்வின் மீதாணையாக ! மலைகளுள் ஒன்றை நகர்த்த வேண்டுமென என்னை அவர்கள் பணித்திருந்தாலும்கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது . குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது . நான் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப் போகிறீர்கள் ?`` என்று கேட்டேன் . அதற்கு அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! இது நன்மை ( யான பணி ) தான் `` என்று சொன்னார்கள் . இதையே என்னிடம் அன்னார் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள் . முடிவில் எதற்காக அபூபக்ர் , உமர் ரளியல்லாஹு அன்ஹுமா ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான் . அவர்கள் இருவரும் கருதியதையே நானும் ( உசிதமானதாகக் ) கருதினேன் . ஆகவே , நான் ( மக்களின் கரங்களிலிருந்த ) குர்ஆன் ( சுவடிகளைத் ) தேடினேன் . அகலமான பேரீச்சமட்டைகள் , துண்டுத் தோல்கள் , ஓடுகள் மற்றும் ( குர்ஆனை மனனம் செய்திருந்த ) மனிதர்களின் நெஞ்சங்கள் ஆகியவற்றிலிருந்து குர்ஆன் வசனங்களைத் திரட்டினேன் . அப்போது நான் அத்தவ்பா எனும் (9ஆம்) அத்தியாயத்தின் இறுதி வசனம் " குஸைமா ` ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அல்லது " அபூகுஸைமா ` ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருக்கக் கண்டேன் . அதை நான் அதற்குரிய அத்தியாயத்தில் சேர்த்தேன் . “ உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார் `` என்று தொடங்கும் (9:128ஆம்) வசனமே அந்த வசனமாகும் . ( என் வாயிலாகத் திரட்டித் தொகுக்கப்பெற்ற ) குர்ஆன் பிரதிகள் ( கலீஃபா ) அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை அவர்களது வாழ்நாள் முழுக்க இருந்து வந்தது . பிறகு ( கலீஃபா ) உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அவர்களை அல்லாஹ் மரணிக்கச் செய்யும் வரை அவர்களது வாழ்நாள் முழுக்க இருந்து வந்தது . பிறகு ( நபிகளாரின் துணைவியாரான ) ஹஃப்ஸா பின்த் உமர் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இருந்துவந்தது .
(خ) عَنْ أَنَسَ بْنَ مَالِكٍ: أَنَّ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ قَدِمَ عَلَى عُثْمَانَ وَكَانَ يُغَازِي أَهْلَ الشَّأْمِ فِي فَتْحِ إِرْمِينِيَةَ وَأَذْرَبِيجَانَ مَعَ أَهْلِ الْعِرَاقِ فَأَفْزَعَ حُذَيْفَةَ اخْتِلاَفُهُمْ فِي الْقِرَاءَةِ فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَدْرِكْ هَذِهِ الأُمَّةَ قَبْلَ أَنْ يَخْتَلِفُوا فِي الْكِتَابِ اخْتِلاَفَ الْيَهُودِ وَالنَّصَارَى فَأَرْسَلَ عُثْمَانُ إِلَى حَفْصَةَ أَنْ أَرْسِلِي إِلَيْنَا بِالصُّحُفِ نَنْسَخُهَا فِي الْمَصَاحِفِ ثُمَّ نَرُدُّهَا إِلَيْكِ فَأَرْسَلَتْ بِهَا حَفْصَةُ إِلَى عُثْمَانَ فَأَمَرَ زَيْدَ بْنَ ثَابِتٍ وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ وَسَعِيدَ بْنَ الْعَاصِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي الْمَصَاحِفِ وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّينَ الثَّلاَثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَىْءٍ مِنَ الْقُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ فَفَعَلُوا حَتَّى إِذَا نَسَخُوا الصُّحُفَ فِي الْمَصَاحِفِ رَدَّ عُثْمَانُ الصُّحُفَ إِلَى حَفْصَةَ وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ مِمَّا نَسَخُوا وَأَمَرَ بِمَا سِوَاهُ مِنَ الْقُرْآنِ فِي كُلِّ صَحِيفَةٍ أَوْ مُصْحَفٍ أَنْ يُحْرَقَ. 436
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஹுதைஃபா பின் யமான் ரளியல்லாஹு அன்ஹு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ( அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு ) வருகை புரிந்தார்கள் . ( அப்போது ) உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு , அர்மீனியா , அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு சிரியாவாழ் மக்களுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள் . ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை , ( இராக் , சிரியா நாட்டு ) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடுகொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது . ஆகவே , ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ யூதர்களும் கிறிஸ்தவர்களும் ( தங்களுடைய வேதங்களில் ) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த ( த் திருக் குர்ஆன் ) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள் , இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே !`` என்று கூறினார்கள் . ஆகவே , உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு ( அன்னை ) ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஆளனுப்பி " தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் ! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டுத் திருப்பித் தந்து விடுகிறோம் `` என்று தெரிவித்தார்கள் . எனவே , ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள் . ஸைத் பின் ஸாபித் , அப்துல்லாஹ் பின் ஸுபைர் , சயீத் பின் ஆஸ் , அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு உத்தரவிட்டார்கள் . மேலும் , உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு ( அந்த நால்வரில் ) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி , “ நீங்களும் ( அன்ஸாரியான ) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு ( எழுத்திலக்கண ) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் ( வட்டார ) மொழிவழக்குப்படியே பதிவு செய்யுங்கள் . ஏனெனில் , குர்ஆன் குறைஷியரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று `` என்று கூறினார்கள் . அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள் . ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்த அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள் . பிறகு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அந்தப் பிரதியை ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் . பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள் . இதுவல்லாமல் ( புழக்கத்திலிருந்த ) இதர பிரதிகளை , அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு உத்தரவிட்டார்கள் .
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَعْرِفُ فَصْلَ السُّورَةِ حَتَّى تَنَزَّلَ عَلَيْهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ . 437
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் எனும் வசனம் அருளப்படுகின்ற வரை அத்தியாயங்களுக்கு இடையே பிரித்தல் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிந்திருக்கவில்லை .
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ . 438
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ஒரேயரு ( வட்டார ) மொழிவழக்குப் படி ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ( குர்ஆனை ) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள் . அதை இன்னும் பல ( வட்டார ) மொழிவழக்குகளின்படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன் . ( நான் கேட்கக் கேட்க ) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக் கொண்டே வந்து இறுதியில் ஏழு ( வட்டார ) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது .
(ق ) عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِيهَا وَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ ثُمَّ أَمْهَلْتُهُ حَتَّى انْصَرَفَ ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ فَجِئْتُ بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا فَقَالَ لِي أَرْسِلْهُ ثُمَّ قَالَ لَهُ اقْرَأْ فَقَرَأَ قَالَ هَكَذَا أُنْزِلَتْ ثُمَّ قَالَ لِي اقْرَأْ فَقَرَأْتُ فَقَالَ هَكَذَا أُنْزِلَتْ إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مِنْهُ مَا تَيَسَّ . 439
உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு ( திருக்குர்ஆனின் 25ஆம்) அத்தியாயம் அல்ஃபுர்கானை நான் ஓதுகின்ற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக் காட்டியிருந்தார்கள் . நான் , உடனே ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டிக்க முற்பட்டேன் . பிறகு ( சற்று யோசித்து ) அவர்கள் தொழுகையை முடிக்கும் வரை அவர்களுக்கு அவகாசம் அளித் ( துக் காத்திருந் ) தேன் . ( அவர்கள் தொழுது முடித்த ) பிறகு , அவர்களின் போர்வை ( போன்ற அங்கி ) யை அவர்களுடைய கழுத்தில் போட்டு இழுத்து , அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று , "( நபியவர்களே !) நீங்கள் எனக்கு ஓதிக் கொடுத்ததற்கு மாற்றமாக இவர் ஓதுவதை நான் கேட்டேன் `` என்று கூறினேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவரை விட்டு விடுங்கள் `` என்று கூறினார்கள் . பிறகு ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி , “ நீங்கள் ஓதுங்கள் `` என்று கூறினார்கள் . அவர் ஓத , அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இப்படித்தான் ( இந்த அத்தியாயம் ) இறங்கிற்று `` என்று கூறினார்கள் . பிறகு என்னை நோக்கி , “ நீங்கள் ஓதுங்கள் `` என்று கூறினார்கள் . நான் ஓதினேன் . ( அதைக் கேட்ட ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இப்படித்தான் ( இந்த அத்தியாயம் ) இறங்கிற்று . நிச்சயமாக , குர்ஆன் , ( ஓதுவதற்கான ) ஏழு முறைகளின்படி இறக்கியருளப்பட்டிருக்கின்றது . ஆகவே , உங்களுக்கு இலேசானதை அதிலிருந்து ஓதிக் கொள்ளுங்கள் `` என்று கூறினார்கள் .
(م) عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ كُنْتُ فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ يُصَلِّي فَقَرَأَ قِرَاءَةً أَنْكَرْتُهَا عَلَيْهِ ثُمَّ دَخَلَ آخَرُ فَقَرَأَ قِرَاءَةً سِوَى قَرَاءَةِ صَاحِبِهِ فَلَمَّا قَضَيْنَا الصَّلَاةَ دَخَلْنَا جَمِيعًا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ إِنَّ هَذَا قَرَأَ قِرَاءَةً أَنْكَرْتُهَا عَلَيْهِ وَدَخَلَ آخَرُ فَقَرَأَ سِوَى قِرَاءَةِ صَاحِبِهِ فَأَمَرَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَآ فَحَسَّنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَأْنَهُمَا فَسَقَطَ فِي نَفْسِي مِنْ التَّكْذِيبِ وَلَا إِذْ كُنْتُ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدْ غَشِيَنِي ضَرَبَ فِي صَدْرِي فَفِضْتُ عَرَقًا وَكَأَنَّمَا أَنْظُرُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ فَرَقًا فَقَالَ لِي يَا أُبَيُّ أُرْسِلَ إِلَيَّ أَنْ اقْرَأْ الْقُرْآنَ عَلَى حَرْفٍ فَرَدَدْتُ إِلَيْهِ أَنْ هَوِّنْ عَلَى أُمَّتِي فَرَدَّ إِلَيَّ الثَّانِيَةَ اقْرَأْهُ عَلَى حَرْفَيْنِ فَرَدَدْتُ إِلَيْهِ أَنْ هَوِّنْ عَلَى أُمَّتِي فَرَدَّ إِلَيَّ الثَّالِثَةَ اقْرَأْهُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَلَكَ بِكُلِّ رَدَّةٍ رَدَدْتُكَهَا مَسْأَلَةٌ تَسْأَلُنِيهَا فَقُلْتُ اللَّهُمَّ اغْفِرْ لِأُمَّتِي اللَّهُمَّ اغْفِرْ لِأُمَّتِي وَأَخَّرْتُ الثَّالِثَةَ لِيَوْمٍ يَرْغَبُ إِلَيَّ الْخَلْقُ كُلُّهُمْ حَتَّى إِبْرَاهِيمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ . 440
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன் . அப்போது ஒரு மனிதர் ( பள்ளிவாசலுக்குள் ) வந்து தொழலானார் ; ( தொழுகையில் குர்ஆன் வசனங்களை ) ஒரு விதமாக ஓதினார் . அதை நான் அறிந்திருக்கவில்லை . பிறகு மற்றொருவர் வந்து ( அதே வசனங்களை ) முதலாமவர் ஓதியதற்கு மாற்றமாக ஓதித் தொழலானார் . தொழுகை முடிந்ததும் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றோம் . நான் " இவர் குர்ஆனை நான் அறிந்திராத ( ஓதல் ) முறையில் ஓதினார் . பின்னர் மற்றவர் வந்து முதலாமவர் ஓதியதற்கு மாறாக ( அதையே ) வேறு முறையில் ஓதினார் `` என்றேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்விருவரையும் ஓதிக் காட்டும்படி பணித்தார்கள் . அவ்விருவரும் ஓதினர் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்விருவரும் சரியாகவே ஓதினர் எனக் கூறினார்கள் . ( இதைக் கேட்டவுடன் ) என் உள்ளத்தில் நபியவர்கள் பொய்யுரைக்கிறார்கள் என்ற எண்ணம் விழுந்தது . அறியாமைக் காலத்தில்கூட இத்தகைய எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை . என்னை ஆட்கொண்டிருந்த ( அந்த எண்ணத் ) தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டபோது என் நெஞ்சில் ஓர் அடி அடித்தார்கள் . ( அடி விழுந்ததும் ) எனக்கு வியர்த்துக் கொட்டியது . அச்சத்தால் எனக்கு அல்லாஹ்வே காட்சியளிப்பதைப் போன்றிருந்தது . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் " உபை , குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக ` என எனக்கு ( இறைவனிடமிருந்து ) செய்தி அறிவிக்கப்பட்டது . உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் எளிதாக்கும்படி ( இறைவனிடம் ) கோரினேன் . அப்போது " குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக !` என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான் . உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு எளிதாக்கும்படி கோரினேன் . மூன்றாவது முறை குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின்படி ஓதுமாறு எனக்கு இறைவன் அறிவித்தான் . மேலும் , " நீர் கோரிய ( மூன்று கோரிக்கைகளில் ) ஒவ்வொரு கோரிக்கைக்கும் பகரமாக என்னிடம் உமக்கு ஓர் ( அங்கீகரிக்கப்பட்ட ) பிரார்த்தனை உண்டு ` என்றும் ( இறைவன் ) கூறினான் . எனவே நான் ‘ இறைவா ! என் சமுதாயத்தாரை மன்னிப்பாயாக ! இறைவா ! என் சமுதாயத்தாரின் குற்றங்குறைகளை மறைப்பாயாக !` என ( இரண்டு ) பிரார்த்தனை செய்தேன் . ( இவ்விரு பிரார்த்தனைகள் அல்லாமல் ) மூன்றாவது பிரார்த்தனையை நான் ஒரு நாளைக்காகத் தாமதப்படுத்தி ( பத்திரப்படுத்தி ) வைத்துள்ளேன் . அந்நாளில் படைப்பினங்கள் அனைத்தும் என்னிடம் ( பரிந்துரைக்கும்படி ) ஆவலுடன் வருவார்கள் ; இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் உட்பட `` எனக் கூறினார்கள் .
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ لَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلَ فَقَالَ يَا جِبْرِيلُ إِنِّي بُعِثْتُ إِلَى أُمَّةٍ أُمِّيِّينَ مِنْهُمْ الْعَجُوزُ وَالشَّيْخُ الْكَبِيرُ وَالْغُلَامُ وَالْجَارِيَةُ وَالرَّجُلُ الَّذِي لَمْ يَقْرَأْ كِتَابًا قَطُّ قَالَ يَا مُحَمَّدُ إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ . 441
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( வானவத் தூதர் ) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்தபோது , " ஷிப்ரீலே ! நான் எழுத்தறிவற்ற சமுதாயத்தாருக்கு ( த் தூதராக ) அனுப்பப்பட்டுள்ளேன் . அவர்களில் இயலாதவர்களும் , முதிய வயதுடையவர்களும் , சிறுவர் சிறுமியரும் , எந்த ஒரு நூலையும் அறவே வாசிக்கத் தெரியாதவர்களும் உள்ளனர் ( இவர்களெல்லாம் எந்த முறையில் குர்ஆனை ஓதுவர் ?)" என்று கூறினார்கள் . அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் , " இந்தக் குர்ஆன் ( ஓதுவதற்கான ) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது ( அவற்றில் எளிதானதை அவர்கள் ஓதிக்கொள்ளட்டும் )" என்று கூறினார்கள் .
أَبُو جُهَيْمٍ أَنَّ رَجُلَيْنِ اخْتَلَفَا فِي آيَةٍ مِنْ الْقُرْآنِ فَقَالَ هَذَا تَلَقَّيْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ الْآخَرُ تَلَقَّيْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ الْقُرْآنُ يُقْرَأُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَلَا يُمَارُوا فِي الْقُرْآنِ فَإِنَّ مِرَاءً فِي الْقُرْآنِ كُفْرٌ . 442
அபூஜுஹைம் பின் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : திருக்குர்ஆனின் ஒரு வசனத்தில் இருவர் கருத்துவேறுபாடு கொண்டார்கள் . ( அவர்களுள் ) ஒருவர் , “ நான் இதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கற்றேன் ” என்றார் . ( அவ்விருவருள் ) மற்றவர் , “ நான் இதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கற்றேன் ” என்றார் . எனவே அவ்விருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று ( விஷயத்தைச் சொல்லி விளக்கம் ) கேட்டார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " இந்தக் குர்ஆன் ( ஓதுவதற்கான ) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது ( அவற்றில் எளிதானதை அவர்கள் ஓதிக்கொள்ளுங்கள் ); குர்ஆனில் ( சந்தேகம் கொண்டு ) தர்க்கம் செய்யாதீர்கள் . குர்ஆனில் ( சந்தேகம் கொண்டு ) தர்க்கம் செய்வது இறைமறுப்பாகும் " என்று கூறினார்கள் .
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا قَالَ قَرَأْتُ آيَةً وَقَرَأَ ابْنُ مَسْعُودٍ خِلَافَهَا فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ أَلَمْ تُقْرِئْنِي آيَةَ كَذَا وَكَذَا قَالَ بَلَى فَقَالَ ابْنُ مَسْعُودٍ أَلَمْ تُقْرِئْنِيهَا كَذَا وَكَذَا فَقَالَ بَلَى كِلَاكُمَا مُحْسِنٌ مُجْمِلٌ قَالَ فَقُلْتُ لَهُ فَضَرَبَ صَدْرِي فَقَالَ يَا أُبَيُّ بْنَ كَعْبٍ إِنِّي أُقْرِئْتُ الْقُرْآنَ فَقِيلَ لِي عَلَى حَرْفٍ أَوْ عَلَى حَرْفَيْنِ قَالَ فَقَالَ الْمَلَكُ الَّذِي مَعِي عَلَى حَرْفَيْنِ فَقُلْتُ عَلَى حَرْفَيْنِ فَقَالَ عَلَى حَرْفَيْنِ أَوْ ثَلَاثَةٍ فَقَالَ الْمَلَكُ الَّذِي مَعِي عَلَى ثَلَاثَةٍ فَقُلْتُ عَلَى ثَلَاثَةٍ حَتَّى بَلَغَ سَبْعَةَ أَحْرُفٍ لَيْسَ مِنْهَا إِلَّا شَافٍ كَافٍ إِنْ قُلْتَ غَفُورًا رَحِيمًا أَوْ قُلْتَ سَمِيعًا عَلِيمًا أَوْ عَلِيمًا سَمِيعًا فَاللَّهُ كَذَلِكَ مَا لَمْ تَخْتِمْ آيَةَ عَذَابٍ بِرَحْمَةٍ أَوْ آيَةَ رَحْمَةٍ بِعَذَابٍ . 443
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:நான் ( குர்ஆனிலிருந்து ) ஒரு வசனத்தை ஓதினேன் . இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அதற்கு மாற்றமாக ( அந்த வசனத்தை ) ஓதினார் . எனவே நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ இந்த வசனத்தை இன்னின்னவாறு நீங்கள் என்னிடம் ஓதவில்லையா ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ ஆம் !” என்றார்கள் . இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு “ இந்த வசனத்தை இன்னின்னவாறு நீங்கள் என்னிடம் ஓதவில்லையா ?” என்று கேட்டார்கள் . அதற்கு அவர்கள் , “ ஆம் ! நீங்கள் இருவரும் சரியாகவும் அழகாகவும் ஓதியுள்ளீர்கள் ” என்றார்கள் . பிறகு நான் அவர்களிடம் ( என் மனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தைக் ) கூறினேன் . எனவே அவர்கள் என் நெஞ்சத்தின்மீது ( ஓர் அடி ) அடித்தார்கள் . பின்பு அவர்கள் , “ உபை பின் கஅபே ! நிச்சயமாக என்னிடம் குர்ஆன் ஓதிக்காட்டப்பட்டது . அப்போது என்னிடம் , ஓர் ஓதல் முறையா , இரண்டு ஓதல் முறையா ?” என்று கேட்கப்பட்டது . என்னுடன் இருந்த வானவர் , “ இரண்டு ஓதல் முறை ” என்று கூறினார் . எனவே நான் , “ இரண்டு ஓதல் முறை ” என்று கூறினேன் . பிறகு “ இரண்டு ஓதல் முறையா , மூன்று ஓதல் முறையா ?” என்று கேட்டார் . என்னுடன் இருந்த வானவர் , “ மூன்று ஓதல் முறை ” என்று கூறினார் . எனவே நான் , “ மூன்று ஓதல் முறை ” என்று கூறினேன் . இவ்வாறே ( கேள்வியும் பதிலும் தொடர்ந்து ) ஏழு ஓதல் முறைகள் வரை அடைந்தது . அவற்றில் தெளிவான போதுமான ஓதல் முறைகள் இல்லாமலில்லை . ஃகஃபூரர் ரஹீமா ( மன்னிக்கக்கூடியவன் , அன்பாளன் ) என்று நீ சொன்னாலும் அல்லது சமீஅன் அலீமா ( செவியுறுபவன் , நன்கறிந்தவன் ) என்றோ அலீமன் சமீஆ ( நன்கறிந்தவன் , செவியுறுபவன் ) என்றோ நீ சொன்னாலும் அல்லாஹ் அவ்வாறே உள்ளான் . வேதனை குறித்துப் பேசுகின்ற வசனத்தில் நீ ரஹ்மத் எனும் அருளைக்கொண்டு முடிக்கக் கூடாது . ரஹ்மத் குறித்துப் பேசுகின்ற வசனத்தில் அதாப் எனும் வேதனையைக்கொண்டு முடிக்கக் கூடாது என்று கூறினார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : أُنْزِلَ الْقُرْآنُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ ، وَالْمِرَاءُ فِي الْقُرْآنِ كُفْرٌ ثَلَاثًا ، مَا عَرَفْتُمْ مِنْهُ فَاعْمَلُوا بِهِ ، وَمَا جَهِلْتُمْ مِنْهُ فَرُدُّوهُ إِلَى عَالِمِهِ . 444
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இந்தக் குர்ஆன் ( ஓதுவதற்கான ) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது ( அவற்றில் எளிதானதை அவர்கள் ஓதிக்கொள்ளுங்கள் ); குர்ஆனில் ( சந்தேகம் கொண்டு ) தர்க்கம் செய்வது இறைமறுப்பாகும் என்று - மும்முறை - கூறினார்கள் . அதில் நீங்கள் அறிந்ததைச் செயல்படுத்துங்கள் . அதில் நீங்கள் அறியாததை அறிந்தவரிடம் ( அவரது கவனத்திற்குத் ) திருப்புங்கள் .
(خ ) يُوسُفُ بْنُ مَاهَكٍ قَالَ إِنِّي عِنْدَ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا إِذْ جَاءَهَا عِرَاقِيٌّ فَقَالَ أَيُّ الْكَفَنِ خَيْرٌ قَالَتْ وَيْحَكَ وَمَا يَضُرُّكَ قَالَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَرِينِي مُصْحَفَكِ قَالَتْ لِمَ قَالَ لَعَلِّي أُوَلِّفُ الْقُرْآنَ عَلَيْهِ فَإِنَّهُ يُقْرَأُ غَيْرَ مُؤَلَّفٍ قَالَتْ وَمَا يَضُرُّكَ أَيَّهُ قَرَأْتَ قَبْلُ إِنَّمَا نَزَلَ أَوَّلَ مَا نَزَلَ مِنْهُ سُورَةٌ مِنْ الْمُفَصَّلِ فِيهَا ذِكْرُ الْجَنَّةِ وَالنَّارِ حَتَّى إِذَا ثَابَ النَّاسُ إِلَى الْإِسْلَامِ نَزَلَ الْحَلَالُ وَالْحَرَامُ وَلَوْ نَزَلَ أَوَّلَ شَيْءٍ لَا تَشْرَبُوا الْخَمْرَ لَقَالُوا لَا نَدَعُ الْخَمْرَ أَبَدًا وَلَوْ نَزَلَ لَا تَزْنُوا لَقَالُوا لَا نَدَعُ الزِّنَا أَبَدًا لَقَدْ نَزَلَ بِمَكَّةَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنِّي لَجَارِيَةٌ أَلْعَبُ بَلْ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ وَمَا نَزَلَتْ سُورَةُ الْبَقَرَةِ وَالنِّسَاءِ إِلَّا وَأَنَا عِنْدَهُ قَالَ فَأَخْرَجَتْ لَهُ الْمُصْحَفَ فَأَمْلَتْ عَلَيْهِ آيَ السُّوَرِ . 445
யூசுப் பின் மாஹக் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நான் இருந்து கொண்டிருந்தேன் . அப்போது இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து , “( இறந்தவருக்கு அணிவிக்கப்படும் ) " கஃபன் ` துணியில் சிறந்தது எது ? ( வெள்ளை நிறமா ? மற்ற நிறமா ?)`` என்று கேட்டார் . ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா , “ அடப்பாவமே ! ( நீங்கள் இறந்ததற்குப் பின்னால் எந்தக் கஃபன் துணியால் அடக்கம் செய்யப்பட்டாலும் ) உங்களுக்கு என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது ?`` என்று கேட்டார்கள் . அதற்கவர் , “ இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே ! தங்களிடமுள்ள குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள் ?`` என்று கூறினார் . ( அன்னை ) அவர்கள் , “ ஏன் ?`` என்று கேட்டார்கள் . அதற்கவர் , " அதனை ( முன்மாதிரியாக ) க்கொண்டு நான் குர்ஆனை ( வரிசைக்கிரமமாக ) த் தொகுக்க வேண்டும் . ஏனெனில் , ( தற்சமயம் ) வரிசைப்படி தொகுக்கப்படாமல் தான் குர்ஆன் ஓதப்பட்டு வருகிறது `` என்று சொன்னார் . ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா , “( வரிசைப்படுத்தப்படாமல் உள்ள குர்ஆன் அத்தியாயங்களில் ) எதை நீங்கள் முதலில் ஓதினால் ( என்ன ? எதை அடுத்து ஓதினால் ) என்ன கஷ்டம் ( ஏற்பட்டு விடப்போகிறது )?`` என்று கேட்டார்கள் . " முஃபஸ்ஸல் ` ( எனும் ஓரளவு சிறிய ) அத்தியாயங்களில் உள்ள ஒன்றுதான் முதன் முதலில் அருளப்பட்டது ; அதில் சொர்க்கம் நரகம் பற்றிக் கூறப்பட்டது . அடுத்து மக்கள் இஸ்லாத்தை நோக்கித் திரும்பி ( அதன் நம்பிக்கைகள் மீது திருப்தியடையத் தொடங்கி ) யபோது ஹலால் ( அனுமதிக்கப்பட்டவை ) ஹராம் ( விலக்கப்பட்டவை ) குறித்த வசனங்கள் அருளப்பட்டன . எடுத்த எடுப்பிலேயே “ நீங்கள் மது அருந்தாதீர்கள் `` என்று வசனம் அருளப்பட்டிருந்தால் அவர்கள் , “ நாங்கள் ஒருபோதும் மதுவைக் கைவிடமாட்டோம் `` என்று கூறியிருப்பார்கள் . அல்லது , “ விபச்சாரம் செய்யாதீர்கள் `` என்று ( முதன் முதலில் ) வசனம் அருளப்பட்டிருக்குமானால் , நிச்சயம் அவர்கள் , “ நாங்கள் ஒருபோதும் விபச்சாரத்தைக் கைவிடமாட்டோம் `` என்று கூறியிருப்பார்கள் . ( ஆகவேதான் அல்லாஹ் , படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான் .) நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோதுதான் மக்காவில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு “( இவர்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக உண்மையில் ) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும் . மேலும் , அந்த நேரம் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதும் , கசப்பானதுமாகும் `` எனும் (54:46ஆம்) வசனம் அருளப்பட்டது . ( சட்டங்கள் சம்பந்தமான வசனங்கள் இடம் பெற்றுள்ள ) அல்பகரா (2ஆம்) அத்தியாயமும் , அந்நிஸா (4ஆம்) அத்தியாயமும் நான் ( மதீனாவில் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ( அவர்களுடைய மனைவியாக ) இருந்தபோதுதான் இறங்கின என்று கூறிவிட்டு , ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா தம்மிடமிருந்த அந்தக் குர்ஆன் பிரதியை ( இராக் நாட்டவரான ) அந்த மனிதருக்காகக் கொண்டுவந்து அவருக்காக ஒவ்வோர் அத்தியாயத்தின் வசனங்களையும் எழுதச் செய்தார்கள் .
(ق) عَنْ مَسْرُوقٍ قَالَ ذُكِرَ عَبْدُ اللَّهِ عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو فَقَالَ ذَاكَ رَجُلٌ لَا أَزَالُ أُحِبُّهُ بَعْدَ مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اسْتَقْرِئُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَبَدَأَ بِهِ وَسَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ وَأُبَيِّ بْنِ كَعْبٍ وَمُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ لَا أَدْرِي بَدَأَ بِأُبَيٍّ أَوْ بِمُعَاذِ بْنِ جَبَلٍ . 446
மஸ்ரூக் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது . அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு , “ அவர் எத்தகைய மனிதரென்றால் , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் , அபூ ஹுதைஃபாவின் ( முன்னாள் ) அடிமையான சாலிம் , உபை பின் கஅப் , முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள் ` என்று சொல்லி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதைக் கேட்ட பிறகு அவரை நிரந்தரமாக நான் நேசிக்கலானேன் `` என்று சொன்னார்கள் . அறிவிப்பாளர்களுள் ஒருவரான அம்ர் பின் முர்ரா ரஹிமஹுல்லாஹ் , “ அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முதலாவதாகச் சொன்னாரா , முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முதலாவதாகச் சொன்னாரா ( இவர்கள் இருவருள் யாரை முதலில் குறிப்பிட்டார் ) என்று எனக்குத் தெரியாது `` எனக் கூறுகிறார்கள் .
(ق) عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةٌ كُلُّهُمْ مِنْ الْأَنْصَارِ أُبَيٌّ وَمُعَاذُ بْنُ جَبَلٍ وَأَبُو زَيْدٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ . 447
கதாதா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நான்கு பேர் ( கொண்ட குழுவினர் ) குர்ஆனை ( மனனம் செய்து ) திரட்டினார்கள் . அவர்கள் அனைவருமே அன்ஸாரிகள் ஆவர் . 1. உபை பின் கஅப் . 2. முஆத் பின் ஜபல் . 3. அபூஸைத் . 4. ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோர்தாம் அவர்கள் `` என்று அனஸ் ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் . நான் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ அபூஸைத் என்பவர் யார் ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ என் தந்தையின் சகோதரர்களுள் ஒருவர் `` என்று பதிலளித்தார்கள் .
(ق) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَيٍّ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ لَمْ يَكُنْ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ قَالَ وَسَمَّانِي قَالَ نَعَمْ فَبَكَى. 448
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் அல்லாஹ் உங்களுக்கு , “ வேதம் அருளப்பட்டவர்களிலும் இணை வைப்பவர்களிலும் உள்ள இறை நிராகரிப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும் வரை தங்களுடைய நிராகரிப்பிலிருந்து விலகிக் கொள்வோராய் இருக்கவில்லை ...`` என்னும் ( திருக்குர்ஆனின் 98ஆம்) அத்தியாயத்தை ஓதிக் காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான் `` என்று சொன்னார்கள் . அதற்கு உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு , “ என் பெயரைக் குறிப்பிட்டா ( அப்படிச் ) சொன்னான் ?`` என்று கேட்க , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஆம் `` என்று பதிலளித்தார்கள் . அதைக் கேட்டு உபை பின் கஅப் அவர்கள் ( ஆனந்தம் மேலிட்டு ) அழுதார்கள் .
(خ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ يَعْرِضُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنَ كُلَّ عَامٍ مَرَّةً فَعَرَضَ عَلَيْهِ مَرَّتَيْنِ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ وَكَانَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرًا فَاعْتَكَفَ عِشْرِينَ فِي الْعَام الَّذِي قُبِضَ فِيهِ . 449
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை ( வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற ) குர்ஆன் வசனங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ( மொத்தமாக ) ஓதிக் காட்டுவது வழக்கம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்துபோன ஆண்டில் இரண்டு முறை அவர்களுக்கு ( ஜிப்ரீல் ) ஓதிக் காட்டினார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வோர் ஆண்டும் ( ரமளான் மாதத்தின் இறுதிப் ) பத்து நாட்கள் " இஃதிகாஃப் ` மேற்கொள்வது வழக்கம் . அவர்கள் இறந்த ஆண்டு , ( ரமளானில் ) இருபது நாட்கள் " இஃதிகாஃப் ` மேற்கொண்டார்கள் .
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ أَيُّ الْقِرَاءَتَيْنِ كَانَتْ أَخِيرًا قِرَاءَةُ عَبْدِ اللَّهِ أَوْ قِرَاءَةُ زَيْدٍ ؟ قَالَ: قُلْنَا قِرَاءَةُ زَيْدٍ قَالَ : لَا إِلَّا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْرِضُ الْقُرْآنَ عَلَى جَبْرَائِيلَ كُلَّ عَامٍ مَرَّةً فَلَمَّا كَانَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ عَرَضَهُ عَلَيْهِ مَرَّتَيْنِ وَكَانَتْ آخِرَ الْقِرَاءَةِ قِرَاءَةُ عَبْدِ اللَّهِ . 450
முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு , “ இரண்டு ஓதல்களில் எது கடைசியாக இருந்தது ? அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களின் ஓதலா ? ஸைத் பின் ஸாபித் அவர்களின் ஓதலா ?” என்று கேட்டார்கள் . “ ஸைத் பின் ஸாபித் அவர்களின் ஓதல்தான் ” என்று நாங்கள் கூறினோம் . அதற்கு அவர்கள் , “ இல்லை . மாறாக , ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை வானவர் ஜிப்ரீல் அவர்களிடம் ( அதுவரை அருளப்பெற்ற ) குர்ஆன் வசனங்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( மொத்தமாக ) ஓதிக் காட்டுவது வழக்கம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்துபோன ஆண்டில் இரண்டு முறை அவர்கள் அவரிடம் ( ஜிப்ரீலிடம் ) ஓதிக் காட்டினார்கள் . மேலும் ஓதலில் கடைசியானது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களின் ஓதல்தான் ” என்று கூறினார்கள் .
عَنْ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : عُرِضَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ - عَرَضَاتٍ فَيَقُولُونَ : إِنَّ قِرَاءَتَنَا هَذِهِ هِيَ الْعَرْضَةُ الْأَخِيرَةُ. 451
சமுரா பின் ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆன் வசனங்கள் பல தடவை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ( மொத்தமாக ) ஓதிக் காட்டப்பட்டது . எனவே மக்களாகிய அவர்கள் , ( முன்னிலையில் ஓதிக்காட்டப்படும்போது ) நிச்சயமாக நம்முடைய இந்த ஓதல் முறைதான் ( நபியவர்களுக்குக் ) கடைசியாக ஓதிக்காட்டப்பட்டது என்று கூறுவார்கள் .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ جِبْرِيلُ يَعْرِضُ الْقُرْآنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ عَامٍ مَرَّةً فِي رَمَضَانَ ، فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ عَرَضَهُ مَرَّتَيْنِ . 452
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒவ்வோர் ஆண்டும் ரமளானில் ஒரு முறை ( அதுவரை அருளப்பெற்ற ) குர்ஆன் வசனங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் ( மொத்தமாக ) ஓதிக் காட்டுவது வழக்கம் . நபியவர்களின் உயிர் கைப்பற்றப்பட்ட ஆண்டில் அதை இரண்டு முறை ஓதிக்காட்டினார் .
(خ) عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ أَقْرَؤُنَا أُبَيٌّ وَأَقْضَانَا عَلِيٌّ وَإِنَّا لَنَدَعُ مِنْ قَوْلِ أُبَيٍّ وَذَاكَ أَنَّ أُبَيًّا يَقُولُ لَا أَدَعُ شَيْئًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا . 453
உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : எங்களுள் ( குர்ஆனை ) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு ஆவார் . எங்களுள் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ ரளியல்லாஹு அன்ஹு ஆவார் . நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம் . ஏனெனில் அவர் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன் `` என்று சொல்வார் . ஆனால் , அல்லாஹ்வோ , “ எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால் , அல்லது அகற்றிவிட்டால் ( அதற்குப் பதிலாக ) அதனினும் சிறந்த , அல்லது அதைப் போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம் `` (2: 106) என்று கூறியுள்ளான் .
عَنْ زِرٍّ قَالَ قَالَ لِي أُبَيُّ بْنُ كَعْبٍ كَأَيِّنْ تَقْرَأُ سُورَةَ الْأَحْزَابِ أَوْ كَأَيِّنْ تَعُدُّهَا قَالَ قُلْتُ لَهُ ثَلَاثًا وَسَبْعِينَ آيَةً فَقَالَ قَطُّ لَقَدْ رَأَيْتُهَا وَإِنَّهَا لَتُعَادِلُ سُورَةَ الْبَقَرَةِ وَلَقَدْ قَرَأْنَا فِيهَا الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ نَكَالًا مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ . 454
ஸிர்ரு ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம் , “ நீர் அல்அஹ்ஸாப் அத்தியாயத்தை ஓதுவதைப்போல் தெரிகிறதே ? அல்லது அதை எண்ணுவதைப் போல் தெரிகிறதே ? என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “( ஆம் ! அதில் ) எழுபத்து மூன்று வசனங்கள் உள்ளன ” என்று கூறினேன் . அதற்கு அவர்கள் , நிச்சயமாக ! நான் அதைப் பார்த்திருக்கிறேன் . திண்ணமாக அது அல்பகரா அத்தியாயத்திற்குச் சமமானது . அதில் நாங்கள் ( இவ்வாறு ) படித்திருக்கிறோம் : முதியவரும் மூதாட்டியும் விபச்சாரம் செய்துவிட்டால் கண்டிப்பாக அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவ்விருவரையும் ( மரணம் வரை ) கல்லால் அடியுங்கள் . அல்லாஹ் நன்கறிந்தோனும் நுட்பமானவனும் ஆவான் .
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : مَا كَانَ : يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أُنْزِلَ بِالْمَدِينَةِ ، وَمَا كَانَ : يَا أَيُّهَا النَّاسُ فَي مَكَّةَ . 455
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : எதுவெல்லாம் யாஅய் யுஹல்லதீன ஆமனூ ( இறைநம்பிக்கைகொண்டோரே ) என்று தொடங்குகிறதோ அதுவெல்லாம் மதீனாவில் அருளப்பட்டது . எதுவெல்லாம் யாஅய்யுஹன்னாஸ் ( மக்களே ) என்று தொடங்குகிறதோ அதுவெல்லாம் மக்காவில் அருளப்பட்டது .