عذاب أَهل النار
அத்தியாயம் 5

நரகவாசிகளின் வேதனை

ஹதீஸ் 210 அத்தியாயம் 5 பாடம் 1

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً قَالَ فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا . 210

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உங்கள் ( உலக ) நெருப்பு , நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும் `` என்று கூறினார்கள் . உடனே , “ அல்லாஹ்வின் தூதரே ! இந்த ( உலக ) நெருப்பே ( பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப் ) போதுமானதாயிற்றே `` என்று கேட்கப்பட்டது . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( அப்படியல்ல .) உலக நெருப்பைவிட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது . இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும் `` என்று சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 3265, முஸ்லிம் : 2843)
ஹதீஸ் 211 அத்தியாயம் 5 பாடம் 1

(م) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا . 211

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும் . ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து , இழுத்து வருவார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2842 / 5464)
ஹதீஸ் 212 அத்தியாயம் 5 பாடம் 1

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ وَجْبَةً فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَدْرُونَ مَا هَذَا قَالَ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ هَذَا حَجَرٌ رُمِيَ بِهِ فِي النَّارِ مُنْذُ سَبْعِينَ خَرِيفًا فَهُوَ يَهْوِي فِي النَّارِ الْآنَ حَتَّى انْتَهَى إِلَى قَعْرِهَا . 212

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம் . அப்போது , ஏதோ விழுந்த சத்தத்தை அவர்கள் கேட்டார்கள் . ( நாங்களும் கேட்டோம் .) அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இது என்ன ( சத்தம் ) என்று உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்று சொன்னோம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும் . அது இந்த நேரம் வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது `` என்று சொன்னார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2844 / 5466)
ஹதீஸ் 213 அத்தியாயம் 5 பாடம் 2

(ق) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ جَهَنَّمُ تَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ حَتَّى يَضَعَ رَبُّ الْعِزَّةِ فِيهَا قَدَمَهُ فَتَقُولُ قَطْ قَطْ وَعِزَّتِكَ وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ . 213

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( நரகவாசிகள் நரகத்தில் போடப்படுவார்கள் . நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால் ) “ இன்னும் இருக்கிறதா ?`` என்று கேட்டுக்கொண்டேயிருக்கும் . இறுதியில் கண்ணியத்தின் அதிபதி ( யான இறைவன் ) தமது பாதத்தை அதில் வைப்பான் . அப்போது அது “ போதும் ! போதும் ! உன் கண்ணியத்தின் மீதாணையாக !`` என்று கூறும் . நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும் .

Reference: ( புகாரீ : 6661, முஸ்லிம் : 2848) ( புகாரீ : 7384).
ஹதீஸ் 214 அத்தியாயம் 5 பாடம் 3

(م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضِرْسُ الْكَافِرِ أَوْ نَابُ الْكَافِرِ مِثْلُ أُحُدٍ وَغِلَظُ جِلْدِهِ مَسِيرَةُ ثَلَاثٍ . 214

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( நரகத்தில் ) இறைமறுப்பாளனின் " கடைவாய்ப் பல் ` அல்லது " கோரைப் பல் ` உஹுத் மலையைப் போன்றிருக்கும் . அவனது தோலின் பருமன் மூன்று நாள் பயணத் தொலைவுடையதாக இருக்கும் .

Reference: ( முஸ்லிம் : 2851 / 5479)
ஹதீஸ் 215 அத்தியாயம் 5 பாடம் 4

(ق) عَنْ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَخْطُبُ وَهُوَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لَرَجُلٌ تُوضَعُ فِي أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ . 215

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக நுஅமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார் . அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் ( நரக ) நெருப்புக் கங்கு வைக்கப்படும் . அதனால் அவரது மூளை கொதிக்கும் .

Reference: ( புகாரீ : 6561, முஸ்லிம் : 213)
ஹதீஸ் 216 அத்தியாயம் 5 பாடம் 4

(ق) عَنْ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقُولُ اللَّهُ تَعَالَى لِأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لَوْ أَنَّ لَكَ مَا فِي الْأَرْضِ مِنْ شَيْءٍ أَكُنْتَ تَفْتَدِي بِهِ فَيَقُولُ نَعَمْ فَيَقُولُ أَرَدْتُ مِنْكَ أَهْوَنَ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لَا تُشْرِكَ بِي شَيْئًا فَأَبَيْتَ إِلَّا أَنْ تُشْرِكَ بِي . 216

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படுபவரிடம் “ பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றை பிணைத் தொகையாகத் தர ( வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும் ) நீ முன்வருவாய் அல்லவா ?`` என்று அல்லாஹ் கேட்பான் . அதற்கு அவர் " ஆம் ` என்று பதிலளிப்பார் . அப்போது அல்லாஹ் “ நீ ( மனிதர்களின் தந்தை ) ஆதமின் முதுகந்தண்டில் ( அணுவாக ) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை-எனக்கு எதையும் இணை கற்பிக்கலாகாது என்பதைத்தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன் . ஆனால் ( பூமிக்கு உன்னை அனுப்பியபோது ) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக்கொள்ளவில்லையே !`` என்று கூறுவான் .

Reference: ( புகாரீ : 6557, முஸ்லிம் : 2805)
ஹதீஸ் 217 அத்தியாயம் 5 பாடம் 5

(خ) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا أَنَا قَائِمٌ إِذَا زُمْرَةٌ حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ فَقَالَ هَلُمَّ فَقُلْتُ أَيْنَ قَالَ إِلَى النَّارِ وَاللَّهِ قُلْتُ وَمَا شَأْنُهُمْ قَالَ إِنَّهُمْ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ الْقَهْقَرَى ثُمَّ إِذَا زُمْرَةٌ حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ فَقَالَ هَلُمَّ قُلْتُ أَيْنَ قَالَ إِلَى النَّارِ وَاللَّهِ قُلْتُ مَا شَأْنُهُمْ قَالَ إِنَّهُمْ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ الْقَهْقَرَى فَلَا أُرَاهُ يَخْلُصُ مِنْهُمْ إِلَّا مِثْلُ هَمَلِ النَّعَمِ . 217

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் உறங்கிக் கொண்டிருந்தேன் . அப்போது ( கனவில் ) நான் ( அல்கவ்ஸர் தடாகத்தினருகில் ) நின்று கொண்டிருக்கிறேன் . அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன் . எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு ( வான ) வர் தோன்றி ( அந்தக் குழுவினரை நோக்கி ) " வாருங்கள் ` என்று அழைக்கிறார் . உடனே நான் ( அவரிடம் ) “ எங்கே ( இவர்களை அழைக்கிறீர்கள் )?`` என்றேன் . அவர் “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நரகத்திற்கு `` என்றார் . நான் “ இவர்கள் என்ன செய்தார்கள் ?`` என்றேன் . அவர் “ உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்று விட்டார்கள் `` என்றார் . பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டுகொள்கிறேன் . எனக்கும் அவர்களுக்கு மிடையே ஒரு ( வான ) வர் தோன்றி , " வாருங்கள் ` என ( அவர்களிடம் ) கூறுகிறார் . நான் “( இவர்களை ) எங்கே ( அழைக்கிறீர்கள் )?`` என்றேன் . அவர் “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நரகத்திற்குத்தான் `` என்றார் . நான் “ இவர்கள் என்ன செய்தார்கள் ?`` என்று கேட்டேன் . அவர் " இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள் `` என்று பதிலளித்தார் . அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை .

Reference: ( புகாரீ : 6587)
ஹதீஸ் 218 அத்தியாயம் 5 பாடம் 6

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ أَنْذَرْتُكُمْ النَّارَ أَنْذَرْتُكُمْ النَّارَ أَنْذَرْتُكُمْ النَّارَ فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى لَوْ كَانَ فِي مَقَامِي هَذَا لَسَمِعَهُ أَهْلُ السُّوقِ حَتَّى سَقَطَتْ خَمِيصَةٌ كَانَتْ عَلَيْهِ عِنْدَ رِجْلَيْهِ . 218

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக நுஅமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் உங்களுக்கு நரகத்தை எச்சரிக்கிறேன் ; நான் உங்களுக்கு நரகத்தை எச்சரிக்கிறேன் ; நான் உங்களுக்கு நரகத்தை எச்சரிக்கிறேன் என்று கூறிக்கொண்டே இருந்தார்கள் . ( இப்போது நான் நிற்கிற ) இந்த இடத்தில் அவர்கள் இருந் ( து கூறியிரு ) திருந்தால் அதைச் சந்தையிலுள்ளோர் செவியுற்றிருப்பர் . ( அதைச் சொன்னபோது ) அவர்கள் மீதிருந்த போர்வை அவர்களுடைய காலடியில் விழுந்துவிட்டது .

Reference: ( தாரமீ : 2854). இதன் அறிவிப்பாளர்தொடர் ` தரமானது ’ ஆகும் .