சொர்க்கம் நரகம் தொடர்பான ஹதீஸ்கள்
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُجِبَتْ النَّارُ بِالشَّهَوَاتِ وَحُجِبَتْ الْجَنَّةُ بِالْمَكَارِهِ . 197
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது . சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது .
(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُفَّتْ الْجَنَّةُ بِالْمَكَارِهِ وَحُفَّتْ النَّارُ بِالشَّهَوَاتِ . 198
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது . மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது .
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ وَالنَّارَ أَرْسَلَ جِبْرِيلَ إِلَى الْجَنَّةِ فَقَالَ انْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا قَالَ فَجَاءَهَا وَنَظَرَ إِلَيْهَا وَإِلَى مَا أَعَدَّ اللَّهُ لِأَهْلِهَا فِيهَا قَالَ فَرَجَعَ إِلَيْهِ قَالَ فَوَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا فَأَمَرَ بِهَا فَحُفَّتْ بِالْمَكَارِهِ فَقَالَ ارْجِعْ إِلَيْهَا فَانْظُرْ إِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا قَالَ فَرَجَعَ إِلَيْهَا فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالْمَكَارِهِ فَرَجَعَ إِلَيْهِ فَقَالَ وَعِزَّتِكَ لَقَدْ خِفْتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ. 199
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்துவிட்டு ( வானவர் ) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி , " அதையும் அதில் சொர்க்கவாசிகளுக்காக நான் தயார் செய்து வைத்துள்ள ( கொடைகள் , இன்பங்கள் ஆகிய ) வற்றையும் பார்வையிடுவீராக !" என்று சொன்னான் . அவ்வாறே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் சென்று சொர்க்கத்தையும் அதில் சொர்க்கவாசிகளுக்காக அல்லாஹ் தயாரித்து வைத்துள்ளவற்றையும் பார்வையிட்டுவிட்டுத் திரும்பி வந்து , "( இறைவா !) உன் வல்லமையின் மீதாணையாக ! இதைப் பற்றிக் கேள்விப்படும் யாரும் இதனுள் நுழைய ( முயலா ) மல் இருக்க மாட்டார்கள் " என்று கூறினார் . அப்போது அல்லாஹ் சிரமங்களால் சொர்க்கத்தைச் சூழச் செய்யுமாறு உத்தரவிட அவ்வாறே செய்யப்பட்டது . பிறகு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் " நீர் மீண்டும் சொர்க்கத்திற்குச் சென்று அதில் சொர்க்கவாசிகளுக்காக நான் தயாரித்து வைத்துள்ளவற்றைப் பார்வையிடுவீராக !" என்று கூறினான் . அவ்வாறே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் திரும்பிச் சென்றபோது சொர்க்கம் சிரமங்களால் சூழப்பெற்றிருந்தது . உடனே அவர்கள் அல்லாஹ்விடம் வந்து , "( இறைவா !) உன் வல்லமையின் மீதாணையாக ! இதில் யாரும் நுழையமாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் " என்று சொன்னார்கள் . பிறகு அல்லாஹ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் , " நீர் நரகத்திற்குச் சென்று , நரகத்தையும் அதில் நரகவாசிகளுக்காக நான் தயாரித்துள்ள ( வேதனைகள் தண்டனைகள் ஆகிய ) வற்றையும் பார்வையிடுவீராக !" என்று கூறினான் . ( ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் சென்று பார்த்தபோது ) நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியின் மீது ஏறிப் பயணித்துக் கொண்டிருந்தது . உடனே அங்கிருந்து திரும்பிய ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் , "( இறைவா !) உன் வல்லமையின் மீதாணையாக ! இதைப் பற்றிக் கேள்விப்படும் யாரும் இதில் நுழையா ( மல் இருக்க முயற்சி செய்யாமல் இருக்க ) மாட்டார்கள் " என்று கூறினார்கள் . பிறகு அல்லாஹ் உத்தரவிட , மன இச்சைகளால் நரகம் சூழச் செய்யப்பட்டது . பிறகு அல்லாஹ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் , “ நீர் மறுபடியும் செல்வீராக ! ( அதைப் பார்வையிடுவீராக !)" என்று கூறினான் . அவ்வாறே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் திரும்பி ( ச் சென்று பார்த்துவிட்டு ) வந்து , "( இறைவா !) உன் வல்லமையின் மீதாணையாக ! இதில் நுழையாமல் யாரும் தப்பிக்கப் போவதில்லை என நான் அஞ்சுகிறேன் " என்று கூறினார்கள் .
(خ ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ أَحَدٌ الْجَنَّةَ إِلَّا أُرِيَ مَقْعَدَهُ مِنْ النَّارِ لَوْ أَسَاءَ لِيَزْدَادَ شُكْرًا وَلَا يَدْخُلُ النَّارَ أَحَدٌ إِلَّا أُرِيَ مَقْعَدَهُ مِنْ الْجَنَّةِ لَوْ أَحْسَنَ لِيَكُونَ عَلَيْهِ حَسْرَةً . 200
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( சொர்க்கவாசிகளுள் ) எவரும் , ( உலக வாழ்வில் ) தாம் பாவம் புரிந்திருந்தால் நரகத்தில் தமது இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் சொர்க்கத்தில் நுழையமாட்டார் . அவர் அதிகமாக ( மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு ) நன்றி செலுத்துவதற்காகவே ( இவ்வாறு காட்டப்படும் ). ( நரகவாசிகளுள் ) எவரும் , ( உலக வாழ்வில் ) தாம் நன்மை புரிந்திருந்தால் சொர்க்கத்தில் தமது இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் நரகத்தில் நுழையமாட்டார் . இது அவருக்கு ( பெரும் ) துயரமாக அமைய வேண்டும் என்பதற்காகவே ( காட்டப்படுகிறது ).
(خ ) عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَنَّةُ أَقْرَبُ إِلَى أَحَدِكُمْ مِنْ شِرَاكِ نَعْلِهِ وَالنَّارُ مِثْلُ ذَلِكَ . 201
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது . நரகமும் அதைப் போன்றே ( மிக அருகில் உள்ளது ).
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَأَيْتُ مِثْلَ النَّارِ نَامَ هَارِبُهَا وَلَا مِثْلَ الْجَنَّةِ نَامَ طَالِبُهَا. 202
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் நரக நெருப்பைப் போன்று ( கடுமையான ) எதையும் கண்டதில்லை . அதிலிருந்து வெருண்டோட வேண்டியவன் உறங்கிக் கிடக்கிறான் . நான் சொர்க்கத்தைப் போன்று ( இன்பமான ) எதையும் கண்டதில்லை . அதைத் தேட வேண்டியவனும் உறங்கிக் கிடக்கிறான் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحَاجَّتْ الْجَنَّةُ وَالنَّارُ فَقَالَتْ النَّارُ أُوثِرْتُ بِالْمُتَكَبِّرِينَ وَالْمُتَجَبِّرِينَ وَقَالَتْ الْجَنَّةُ مَا لِي لَا يَدْخُلُنِي إِلَّا ضُعَفَاءُ النَّاسِ وَسَقَطُهُمْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لِلْجَنَّةِ أَنْتِ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي وَقَالَ لِلنَّارِ إِنَّمَا أَنْتِ عَذَابِي أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا مِلْؤُهَا فَأَمَّا النَّارُ فَلَا تَمْتَلِئُ حَتَّى يَضَعَ رِجْلَهُ فَتَقُولُ قَطْ قَطْ فَهُنَالِكَ تَمْتَلِئُ وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ وَلَا يَظْلِمُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ خَلْقِهِ أَحَدًا وَأَمَّا الْجَنَّةُ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُنْشِئُ لَهَا خَلْقًا . 203
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன . அப்போது நரகம் , “" பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன் `` என்று சொன்னது . சொர்க்கம் , “ எனக்கு என்ன நேர்ந்ததோ ! மக்களுள் பலவீனர்களும் அவர்களுள் கீழ்நிலையினருமே ( அதிகமாக ) என்னுள் நுழைவார்கள் `` என்று கூறியது . அல்லாஹ் சொர்க்கத்திடம் , “ நீ எனது அருள் . உன் மூலமே என் அடியார்களுள் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகின்றேன் `` என்று கூறினான் . நரகத்திடம் “ நீ வேதனை ( க்காகத் ) தான் . உன் மூலமே என் அடியார்களுள் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன் `` என்று கூறினான் . அந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் வயிறு நிரம்பத் தரப்படும் . ஆனால் , நரகமோ இறைவன் தனது காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது . இறைவன் காலை வைக்கும்போது நரகம் “ போதும் ! போதும் !`` என்று கூறும் . அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும் . மேலும் , ( நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை ; மாறாக ,) அதில் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும் . அல்லாஹ் தன்னுடைய படைப்புகளுள் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான் . ஆனால் , வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ் , சொர்க்கத்திற்கென்றே ( புதிதாகச் ) சிலரைப் படை ( த்து அதை நிறை ) ப்பான் .
(ق) عَنْ أُسَامَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : قُمْتُ عَلَى بَابِ الْجَنَّةِ فَكَانَ عَامَّةَ مَنْ دَخَلَهَا الْمَسَاكِينُ وَأَصْحَابُ الْجَدِّ مَحْبُوسُونَ غَيْرَ أَنَّ أَصْحَابَ النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ وَقُمْتُ عَلَى بَابِ النَّارِ فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا النِّسَاءُ . 204
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உசாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன் . அதில் நுழைவோருள் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர் . செல்வர்கள் ( சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காகத் ) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர் . எனினும் , ( அவர்களுள் ) நரகவாசிகள் ( எனத் தீர்மானிக்கப்பட்டோர் ஏற்கெனவே ) நரகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டனர் . நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன் . அதில் நுழைவோருள் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர் .
( خ ) عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ . 205
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் ( மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது ) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் . அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன் . நரகத்தையும் எட்டிப் பார்த்தேன் . அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களைக் கண்டேன் .
(م) عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ذَاتَ يَوْمٍ فِي خُطْبَتِهِ أَلَا إِنَّ رَبِّي أَمَرَنِي أَنْ أُعَلِّمَكُمْ مَا جَهِلْتُمْ مِمَّا عَلَّمَنِي يَوْمِي هَذَا كُلُّ مَالٍ نَحَلْتُهُ عَبْدًا حَلَالٌ وَإِنِّي خَلَقْتُ عِبَادِي حُنَفَاءَ كُلَّهُمْ وَإِنَّهُمْ أَتَتْهُمْ الشَّيَاطِينُ فَاجْتَالَتْهُمْ عَنْ دِينِهِمْ وَحَرَّمَتْ عَلَيْهِمْ مَا أَحْلَلْتُ لَهُمْ وَأَمَرَتْهُمْ أَنْ يُشْرِكُوا بِي مَا لَمْ أُنْزِلْ بِهِ سُلْطَانًا وَإِنَّ اللَّهَ نَظَرَ إِلَى أَهْلِ الْأَرْضِ فَمَقَتَهُمْ عَرَبَهُمْ وَعَجَمَهُمْ إِلَّا بَقَايَا مِنْ أَهْلِ الْكِتَابِ . 206
இயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள் : அறிந்து கொள்ளுங்கள் : என் இறைவன் இன்றைய நாள் எனக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து நீங்கள் அறியாதவற்றை உங்களுக்குக் கற்றுத்தருமாறு எனக்குக் கட்டளையிட்டான் . ( இறைவன் கூறினான் :) நான் ஓர் அடியானுக்கு வெகுமதியாக வழங்கியுள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கு அனுமதிக்கப்பட்டவையே ஆகும் . நான் என் அடியார்கள் அனைவரையும் ( இயற்கையிலேயே ) உண்மை வழி நின்றவர்களாகவே படைத்தேன் . ( ஆயினும் ) அவர்களிடம் ஷைத்தான் வந்து அவர்களது இயற்கை நெறியிலிருந்து அவர்களைப் பிறழச் செய்துவிட்டான் . நான் அவர்களுக்கு அனுமதித்துள்ளவற்றைத் தடை செய்யப்பட்டவையாக ஆக்கிவிட்டான் ; நான் எனக்கு இணை கற்பிப்பதற்கு எந்தச் சான்றையும் இறக்காத நிலையில் எனக்கு இணை கற்பிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டான் . அல்லாஹ் பூமியில் வசித்துக்கொண்டிருப்போரைப் பார்த்து , அவர்களில் அரபியர் , அரபியரல்லாதோர் அனைவர்மீதும் ( அவர்கள் இணை கற்பித்துக்கொண்டிருந்ததால் ) கடுங்கோபம் கொண்டான் ; வேதக்காரர்களில் ( இணைவைக்காமல் ) எஞ்சியிருந்தோரைத் தவிர ! மேலும் ( என்னிடம் ) இறைவன் , நான் உம்மைச் சோதிப்பதற்கும் உம்மைக் கொண்டு ( பிறரைச் ) சோதிப்பதற்குமே உம்மை நான் அனுப்பினேன் . ( வெள்ள ) நீரில் அழிந்துபோய் விடாத வேதத்தையும் உமக்கு நான் அருளினேன் . அதை உறங்கும்போதும் விழித்திருக்கும் நிலையிலும் நீர் ஓதுகின்றீர் `` என்று கூறினான் . மேலும் , என் இறைவன் குரைஷியரை எரித்துவிடுமாறு எனக்குக் கட்டளையிட்டான் . அப்போது நான் “ என் இறைவா ! அவர்கள் என் தலையை நொறுக்கி ஒரு ரொட்டியைப் போன்று ஆக்கிவிடுவார்களே ?`` என்று கூறினேன் . இறைவன் , “ உம்மை ( உமது பிறந்தகத்திலிருந்து ) அவர்கள் வெளியேற்றியதைப் போன்று அவர்களை நீர் வெளியேற்றி விடுவீராக . அவர்களிடம் அறப்போர் புரிவீராக . உமக்கு நாம் உதவுவோம் . ( நல்வழியில் ) நீர் செலவிடுவீராக . உமக்கு நாம் செலவிடுவோம் . ( அவர்களை நோக்கி ) ஒரு படையை அனுப்புவீராக . அதைப் போன்று ஐந்து மடங்கு படையை நாம் அனுப்புவோம் . உமக்குக் கீழ்ப்படிபவர்களுடன் சேர்ந்து உமக்கு மாறு செய்வோருடன் நீர் போரிடுவீராக `` என்று கூறினான் . மேலும் , சொர்க்கவாசிகள் மூவர் ஆவர் . ஒருவர் , நீதிநெறி வழுவாமல் வாரி வழங்கி நல்லறம் புரிய வாய்ப்பளிக்கப்படும் அரசர் . இரண்டாமவர் உறவினர்களிடமும் மற்ற முஸ்லிம்களிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்பவர் . மூன்றாமவர் குழந்தை குட்டிகள் இருந்தும் ( தவறான வழியில் பொருளீட்டிவிடாமல் ) தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற மனிதர் . நரகவாசிகள் ஐவர் ஆவர் . முதலாமவர் , புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனர் . அவர் ( சுய காலில் நிற்காமல் ) உங்களையே பின்தொடர்வார் . தமக்கெனக் குடும்பத்தையோ செல்வத்தையோ தேடிக்கொள்ள மாட்டார் . இரண்டாமவர் , எந்த ஆசையையும் விட்டுவைக்காத மோசடிக்காரர் . அற்பமானதே ஆனாலும் மோசடி செய் ( தாவது அதை அடை ) யாமல் விடமாட்டார் . மூன்றாமவர் , காலையிலும் மாலையிலும் உம்முடைய வீட்டார் விஷயத்திலும் உமது செல்வம் விஷயத்திலும் உமக்குத் துரோகமிழைப்பவர் . ( நரகவாசிகளின் குணங்களில் நான்காவதாகக் ) கருமித்தனத்தை அல்லது பொய்யைக் கூறினார்கள் . ஐந்தாமவன் , “ அதிகமாக அருவருப்பாகப் பேசுகின்ற ஒழுங்கீனன் `` என்று குறிப்பிட்டார்கள் . மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் கூடுதலாக இடம்பெற்றுள்ளதாவது : “ பணிவாக நடந்துகொள்ளுங்கள் . உங்களுள் ஒருவர் மற்றவரிடம் பெருமையடிக்க வேண்டாம் . ஒருவர் மற்றவரிடம் எல்லை மீற வேண்டாம் `` என்று இறைவன் எனக்கு அறிவித்தான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
(م ) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِأَنْعَمِ أَهْلِ الدُّنْيَا مِنْ أَهْلِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ فَيُصْبَغُ فِي النَّارِ صَبْغَةً ثُمَّ يُقَالُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ هَلْ مَرَّ بِكَ نَعِيمٌ قَطُّ فَيَقُولُ لَا وَاللَّهِ يَا رَبِّ وَيُؤْتَى بِأَشَدِّ النَّاسِ بُؤْسًا فِي الدُّنْيَا مِنْ أَهْلِ الْجَنَّةِ فَيُصْبَغُ صَبْغَةً فِي الْجَنَّةِ فَيُقَالُ لَهُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ بُؤْسًا قَطُّ هَلْ مَرَّ بِكَ شِدَّةٌ قَطُّ فَيَقُولُ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا مَرَّ بِي بُؤْسٌ قَطُّ وَلَا رَأَيْتُ شِدَّةً قَطُّ . 207
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளுள் ஒருவர் மறுமை நாளில் கொண்டு வரப்பட்டு , நரகத்தில் ஒரு முறை அழுத்தி எடுக்கப்படுவார் . பிறகு அவரிடம் , “ ஆதமின் மகனே ( மனிதா )! எப்போதேனும் ( உலக வாழ்வில் ) நல்லதைப் பார்த்தாயா ? எப்போதேனும் அருட்கொடை ( இன்பம் ) ஏதும் உனக்குக் கிடைத்ததா ?`` என்று கேட்கப்படும் . அதற்கு அவர் , “ அல்லாஹ்வின் மீதாணையாக , இல்லை என் இறைவா !`` என்று பதிலளிப்பார் . அவ்வாறே , இவ்வுலகில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளுள் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டு , சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார் . பிறகு அவரிடம் , “ ஆதமின் மகனே ! ( உலகில் ) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா ? எப்போதேனும் துன்பம் ஏதும் உமக்கு ஏற்பட்டதா ?`` என்று கேட்கப்படும் . அதற்கு அவர் “ அல்லாஹ்வின் மீதாணையாக ! இல்லை , என் இறைவா ! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை . ஒருபோதும் நான் சிரமத்தைக் கண்டதுமில்லை `` என்று கூறுவார் .
(ق) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالْمَوْتِ كَهَيْئَةِ كَبْشٍ أَمْلَحَ فَيُنَادِي مُنَادٍ يَا أَهْلَ الْجَنَّةِ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ فَيَقُولُ هَلْ تَعْرِفُونَ هَذَا فَيَقُولُونَ نَعَمْ هَذَا الْمَوْتُ وَكُلُّهُمْ قَدْ رَآهُ ثُمَّ يُنَادِي يَا أَهْلَ النَّارِ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ فَيَقُولُ هَلْ تَعْرِفُونَ هَذَا فَيَقُولُونَ نَعَمْ هَذَا الْمَوْتُ وَكُلُّهُمْ قَدْ رَآهُ فَيُذْبَحُ ثُمَّ يَقُولُ يَا أَهْلَ الْجَنَّةِ خُلُودٌ فَلَا مَوْتَ وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ فَلَا مَوْتَ ثُمَّ قَرَأَ وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهَؤُلَاءِ فِي غَفْلَةٍ أَهْلُ الدُّنْيَا وَهُمْ لَا يُؤْمِنُونَ . 208
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளில் ) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டு வரப்படும் . அப்போது அறிவிப்புச் செய்யும் ( வானவர்களுள் ) ஒருவர் , “ சொர்க்கவாசிகளே !` என்று அழைப்பார் . அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள் . அறிவிப்புச் செய்பவர் , “ இதை ( இந்த ஆட்டை ) நீங்கள் அறிவீர்களா ?`` என்று கேட்பார் . அவர்கள் , “ ஆம் ! இதுதான் மரணம் `` என்று பதிலளிப்பார்கள் . அவர்கள் அனைவரும் அதை ( முன்பே ) பார்த்திருக்கிறார்கள் . பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி : “ நரகவாசிகளே !` என்று அழைப்பார் . அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள் . அவர் “ இதை நீங்கள் அறிவீர்களா ?`` என்று கேட்பார் . அவர்கள் , “ ஆம் ( அறிவோம் ); இதுதான் மரணம் `` என்று பதில் சொல்வார்கள் . அவர்கள் அனைவரும் அதை ( முன்பே ) பார்த்துள்ளனர் . உடனே அது ( ஆட்டின் உருவத்திலுள்ள மரணம் ) அறுக்கப்பட்டுவிடும் . பிறகு அவர் , “ சொர்க்கவாசிகளே ! நிரந்தரம் ; இனி மரணமே இல்லை . நரகவாசிகளே ! நிரந்தரம் ; இனி மரணம் என்பதே இல்லை `` என்று கூறுவார் . இதை அறிவித்த அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் : இதைக் கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( நபியே !) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள் ! எனினும் , ( இன்று உலக வாழ்வில் ) இவர்கள் கவலையற்றிருக்கின்றனர் . ஆதலால் இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் `` எனும் (19:39ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள் . மேலும் , “ இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று , அசட்டையாக உள்ளனர் . ஆகவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் `` என்றும் சொன்னார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا لَهُ مَنْزِلَانِ مَنْزِلٌ فِي الْجَنَّةِ وَمَنْزِلٌ فِي النَّارِ فَإِذَا مَاتَ فَدَخَلَ النَّارَ وَرِثَ أَهْلُ الْجَنَّةِ مَنْزِلَهُ فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى أُولَئِكَ هُمْ الْوَارِثُونَ . 209
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒவ்வொருவருக்கும் இரண்டு வீடுகள் இல்லாமலில்லை . சொர்க்கத்தில் ஒரு வீடு ; நரகத்தில் ஒரு வீடு . ஒருவன் இறந்து நரகத்தில் நுழைந்துவிட்டால் , அவனுடைய வீட்டைச் சொர்க்கவாசி வாரிசாகப் பெற்றுக்கொள்வார் . அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான் : “ அவர்கள்தாம் வாரிசுதாரர்கள் .” (23: 10)