பாடம்: 23. உதாரணம் கூறிக் கற்பித்தல்
عَنْ الْحَارِثَ الْأَشْعَرِيَّ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ أَمَرَ يَحْيَى بْنَ زَكَرِيَّا بِخَمْسِ كَلِمَاتٍ أَنْ يَعْمَلَ بِهَا وَيَأْمُرَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يَعْمَلُوا بِهَا وَإِنَّهُ كَادَ أَنْ يُبْطِئَ بِهَا . 354
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹாரிஸ் பின் அல்ஹாரிஸ் அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , ( தன் தூதர் ) யஹ்யா பின் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும் அவற்றைச் செயல்படுத்தும்படி பனூஇஸ்ராயீல் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடும்படியும் உத்தரவிட்டான் . ஆனால் , அவற்றை பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரிடம் கூறாமல் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் காலதாமதம் செய்ய முற்பட்டார்கள் . இந்நிலையில் ( இறைத்தூதர் ) ஈஸா அலைஹிஸ்ஸலாம் ( யஹ்யா அவர்களிடம் ), அல்லாஹ் ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறும் அவற்றைச் செயல்படுத்தும்படி பனூ இஸ்லாயீல் சமுதாயத்தாருக்குக் கட்டளையிடும்படியும் உமக்கு உத்தரவிட்டான் . ( அவற்றைச் செயல்படுத்தும்படி ) அவர்களுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் . அல்லது நான் உத்தரவிட வேண்டும் . ( இதை நீங்கள் செய்கிறீர்களா , அல்லது நான் செய்யட்டுமா ?) என்று கேட்டார்கள் . அதற்கு யஹ்யா அலைஹிஸ்ஸலாம் , ( ஈஸா அவர்களிடம் ) இவ்விஷயத்தில் என்னை நீங்கள் முந்திக் கொண்டால் ( காலம் தாழ்த்திய குற்றத்திற்காக ) நான் பூமியில் புதையுண்டு விடுவேனோ , அல்லது வேறு தண்டனைக்கு நான் உள்ளாவேனோ என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள் . பிறகு யஹ்யா அலைஹிஸ்ஸலாம் ( ஜெரூசலத்தில் உள்ள ) பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலில் ( இஸ்ரவேல் ) மக்களை ஒன்று கூட்டினார்கள் . பள்ளிவாசல் ( மக்கள் திரளால் ) நிரம்பி , ( மக்களுக்கு இடம் கிடைக்காமல் ) அவர்கள் பள்ளிவாசலின் மேல் தளத்தின்மீது ஏறிக் கொண்டனர் . அப்போது யஹ்யா அலைஹிஸ்ஸலாம் பின்வருமாறு கூறினார்கள் : ஐந்து கட்டளைகளை நான் நிறைவேற்ற வேண்டுமென்றும் அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி உங்களையும் அவற்றைக் கடைப்பிடிக்குமாறு கட்டளையிட வேண்டும் என்றும் எனக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான் . முதலாவது கட்டளை : அல்லாஹ்வை மட்டுமே நீங்கள் வழிபடுங்கள் . அவனுக்கு வேறு யாரையும் இணையாக்காதீர்கள் . அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவனின் நிலை , ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது . அவர் தமக்கே உரிய செல்வத்தில் பொன் அல்லது வெள்ளியைக் கொடுத்து ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார் . அவர் ( தம் அடிமையிடம் ) " இது எனது வீடு ; இது எனக்கு நீர் செய்ய வேண்டிய வேலை ; நீர் வேலை செய்து ( இதில் கிடைக்கும் வருமானத்தை ) என்னிடமே கொடுத்துவிட வேண்டும் " என்று கூறினார் . அவ்வாறே அந்த அடிமையும் வேலை செய்தார் . ஆனால் , அதில் கிடைத்த ( வருமானத் ) தை தன் உரிமையாளரிடம் அளிக்காமல் வேறு யாரோ ஒருவரிடம் கொடுத்தான் . தம்முடைய அடிமை இவ்வாறு இருப்பது கண்டு உங்களில் யார் மகிழ்ச்சி அடைவார் ? ( இறைவன் வழங்கியவற்றை அனுபவித்துவிட்டு அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டைப் பிறருக்குச் செய்வது நியாயமா ?) ( இரண்டாவது கட்டளை :) அல்லாஹ் தொழுகையைக் கடைப்பிடிக்குமாறு உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான . ஆகவே , நீங்கள் தொழும்போது ( இங்கும் அங்கும் ) திரும்பாதீர்கள் . ஏனெனில் , அல்லாஹ் , தொழுது கொண்டிருக்கும் தன் அடியார் தமது முகத்தைத் திருப்பாத வரை அவரது முகத்துக்கு நேராக தனது முகத்தை வைக்கிறான் . ( மூன்றாவது கட்டளை :) நோன்பு நோற்குமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன் . நோன்பு நோற்பவரின் நிலையானது , ஒரு கூட்டத்தில் தமது கைப்பை நிரம்ப கஸ்தூரியை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது . அந்தக் கஸ்தூரியின் மணம் அவர்களுள் ஒவ்வொருவரையும் வியப்படையச் செய்கிறது . நோன்பு நோற்றவரின் வாயிலிருந்து வரும் வாடை , அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையைவிட நறுமணமிக்கதாகும் . ( நான்காவது கட்டளை :) தான தர்மம் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன் : தர்மம் செய்பவரின் நிலையானது , ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது . அவரை எதிரிகள் கைது செய்து அவரது கையைக் கழுத்தோடு சேர்த்துப் பிணைத்து , சிரச்சேதம் செய்வதற்காக அவரைக் கொண்டு சென்றனர் . அப்போது அந்தக் கைதி "( என்னிடமுள்ள ) குறைவான நிறைவான ( எல்லாப் ) பொருட்களையும் உங்களிடம் பிணைத் தொகையாகச் செலுத்துகிறேன் " என்று கூறி ( அவற்றைச் செலுத்தி ) அவர்களிடமிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார் . ( ஐந்தாவது கட்டளை :) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து துதிக்குமாறு உங்களுக்கு நான் கட்டளையிடுகிறேன் . அவ்வாறு அல்லாஹ்வை நினைவு கூர்ந்து துதிப்பவரின் நிலையானது , எதிரிகள் மிக வேகமாகப் பின்தொடர்ந்து வருகின்ற ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது . அவர் பாதுகாப்பான கோட்டை ஒன்றில் புகுந்து அவர்களிடமிருந்து தம்மைத் தற்காத்துக் கொண்டார் . இவ்வாறுதான் ஓர் அடியார் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து துதிக்காமல் ஷைத்தானிடமிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியாது . ( இந்தச் செய்தியைத் தம் தோழர்களிடம் தெரிவித்த ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , நானும் அல்லாஹ்வின் ஆணைக்கிணங்க ஐந்து கட்டளைகளை நிறைவேற்றுமாறு உங்களுக்கு உத்தரவிடுகிறேன் . 1. ( தலைவரின் ஆணையைச் ) செவியேற்றல் . 2. ( தலைமைக்குக் ) கட்டுப்படல் . 3. அறப்போர் புரிதல் . 4. ( அவசியம் நேர்ந்தால் ) புலம் பெயர்ந்து ( ஹிஜ்ரத் ) செல்லல் . 5. சமூகக் கட்டமைப்பு ( டன் இணைந்திருத்தல் ) ஆகியவையாகும் . ஒருவர் சமூகக் கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவு வெளியேறினாலும் அவர் ( மீண்டும் அதனுள் ) திரும்பி வரும் வரை இஸ்லாம் எனும் கட்டைத் தமது கழுத்திலிருந்து கழற்றிக் கொண்டுவிட்டார் . யார் அறியாமைக் கலாச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கிறாரோ அவர் நரகக் குவியலுக்குச் செல்பவர்களுள் உள்ளவர் ஆவார் . இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னபோது " அல்லாஹ்வின் தூதரே ! அவர் தொழுதாலும் நோன்பு நோற்றாலுமா ?" என்று மனிதர் கேட்டார் . "( ஆம் ) அவர் தொழுதாலும் நோன்பு நோற்றாலும் சரியே ! ( நரகத்துக்குத்தான் செல்வார் ). ஆயினும் ( இவர்கள் முஸ்லிம்கள்தாம் . இவர்களை ) அல்லாஹ் உங்களைப் பெயர் சூட்டி அழைப்பதைப் போன்றே முஸ்லிம்கள் ( இறைவனுக்குக் கீழ்ப்படிபவர்கள் ), முஃமின்கள் ( இறைநம்பிக்கையாளர்கள் ), அல்லாஹ்வின் அடியார்கள் ( இபாதுல்லாஹ் ) என்றே அழையுங்கள் " என்று கூறினார்கள் .
عَنْ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ الْأَنْصَارِيِّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ضَرَبَ اللَّهُ مَثَلًا صِرَاطًا مُسْتَقِيمًا وَعَلَى جَنْبَتَيْ الصِّرَاطِ سُورَانِ فِيهِمَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ وَعَلَى الْأَبْوَابِ سُتُورٌ مُرْخَاةٌ وَعَلَى بَابِ الصِّرَاطِ دَاعٍ يَقُولُ أَيُّهَا النَّاسُ ادْخُلُوا الصِّرَاطَ جَمِيعًا وَلَا تَتَفَرَّجُوا وَدَاعٍ يَدْعُو مِنْ جَوْفِ الصِّرَاطِ فَإِذَا أَرَادَ يَفْتَحُ شَيْئًا مِنْ تِلْكَ الْأَبْوَابِ قَالَ وَيْحَكَ لَا تَفْتَحْهُ فَإِنَّكَ إِنْ تَفْتَحْهُ تَلِجْهُ وَالصِّرَاطُ الْإِسْلَامُ وَالسُّورَانِ حُدُودُ اللَّهِ تَعَالَى وَالْأَبْوَابُ الْمُفَتَّحَةُ مَحَارِمُ اللَّهِ تَعَالَى وَذَلِكَ الدَّاعِي عَلَى رَأْسِ الصِّرَاطِ كِتَابُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالدَّاعِي فَوْقَ الصِّرَاطِ وَاعِظُ اللَّهِ فِي قَلْبِ كُلِّ مُسْلِمٍ . واللفظ لأحمد. 355
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நேரான வழி ( எனும் இஸ்லாமு ) க்கு அல்லாஹ் ஓர் உவமை கூறுகிறான் : அது ஒரு சாலை போன்றது . அந்தச் சாலையின் இரு மருங்கிலும் இரு சுவர்கள் உள்ளன . அவ்விரண்டிலும் திறந்த தலைவாயில்கள் உள்ளன . தலைவாயில்களில் தொங்கும் திரைகள் உள்ளன . அந்தச் சாலையின் நுழைவாயிலில் அழைப்பாளி ஒருவர் இருக்கிறார் . அவர் " மக்களே ! இந்தச் சாலையில் அனைவரும் நுழைந்து கொள்ளுங்கள் . நீங்கள் கோணலான சாலையில் சென்றுவிடாதீர்கள் ” என்று அழைக்கிறார் . அல்லாஹ் அமைதி இல்லத்துக்கு அழைக்கிறான் . தான் நாடியோரை நேரான வழிக்கு வழிகாட்டுகிறான் " என்று கூறுகிறார் . அந்தச் சாலைக்கு மேல் மற்றோர் அழைப்பாளரும் இருக்கின்றார் . அந்தச் சாலையின் நுழைவாயில்களுள் எதையாவது திறக்க நாடினால் , “ உனக்குக் கேடுதான் . அதைத் திறக்காதே . திண்ணமாக நீ அதைத் திறந்தால் அதில் நுழைந்துவிடுவாய் ” என்று கூறுவார் . அந்த நேரான சாலைதான் இஸ்லாம் . ( அந்தச் சாலையின் இரு புறமும் உள்ள ) சுவர்கள் அல்லாஹ்வின் சட்ட வரையறைகளாகும் . திறந்த தலைவாயில்கள் அல்லாஹ்வால் விலக்கப்பட்டவையாகும் . அந்தச் சாலையின் தொடக்கத்திலிருந்து அழைப்பவர் அல்லாஹ்வின் வேதமாகும் . அந்த அழைப்பாளருக்கு மேலேயிருந்து அழைப்பு விடுப்பவர் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உள்ளத்தில் இறைவனால் நியமிக்கப்பட்ட உபதேசி ( மனசாட்சி ) ஆவார் .